UPDATED : டிச 17, 2009 12:00 AM
ADDED : டிச 17, 2009 03:04 PM
வாழ்க்கையில் சேமிப்பு முக்கியம் என்பதை வலியுறுத்தும் வகையில், இது குறித்த பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட உள்ளன.
இதுகுறித்து, அமெரிக்க கல்வித்துறை அமைச்சர் ஆர்னே டங்கன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நிதி ஒழுங்கு முறை ஆணையம் மற்றும் முதலீட்டு கல்வி நிறுவனம் ஆகியவை நடத்திய ஆய்வின் வெளிப்பாடாக, உயர்கல்வியில் பொருளாதார கல்வி சேர்க்க திட்டமிடப்பட்டுள் ளது. அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான மாணவர்கள், சேமிப்பு மற்றும் முதலீட்டின் அடிப்படையே தெரியாமல் உள்ளனர். நிதி சார்ந்த விவகாரங்களில்,அவர்கள் வெற்றிகரமாக திகழ வேண்டியது, நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியம்.
குறைந்த பொருளாதார சேவைகள் உடையவர்கள் மீது, அதிக கவனம் செலுத்தப்படும். அடுத்தாண்டு துவக்கத்தில், பொருளாதார கல்விக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதோடு, பாடத் திட்டங்களில் அவற்றை இணைப்பதற்கான கற்பிக்கும் கருவிகளும் வழங்கப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து, அமெரிக்க நிதித்துறை அமைச்சர் டிமோதி கெய்தர் கூறுகையில்,நாட்டில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால், ஒட்டு மொத்த தலைமுறையும் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே, அமெரிக்கர்கள் சேமிப்பை அதிகரித்து, கடன் வாங்குவதை குறைத்துக் கொள்ள வேண்டும். நாம் பொருளாதார சீரமைப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்றார்.
