நாட்டு நலப்பணித்திட்டம்: செயல்படுத்துவதில் பள்ளி, கல்லூரிகள் திணறல்
நாட்டு நலப்பணித்திட்டம்: செயல்படுத்துவதில் பள்ளி, கல்லூரிகள் திணறல்
UPDATED : டிச 19, 2009 12:00 AM
ADDED : டிச 19, 2009 01:12 PM
அ நிறம் | அளவு
நாட்டுநலப்பணித்திட்டம் மத்திய அரசு நிதியுடன், மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் மத்திய அரசின் இளைஞர் நலத்துறை கட்டுப்பாட்டிற்குள் வருகிறது.நாட்டு நலப்பணித்திட்டத்தில் 37 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறுப்பினராக உள்ளனர். ஆண்டுக்கு ஒரு மாணவருக்கு 160 ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.
இது 15 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட தொகை. இன்றும் அதே தொகைதான் வழங்கப்படுகிறது, உயர்த்தப்படவில்லை. அந்தந்த பகுதிகளில் உள்ள பல்கலை ஒருங்கிணைப்பாளர், இந்த திட்டம் செயல்படும் விதத்தை கண்காணிப்பர். 160 ரூபாய் நிதியில் நிர்வாக செலவுகளுக்கு ஒரு மாணவருக்கு 30 ரூபாய் வீதம் ஒருங்கிணைப்பாளர் அலுவலகங்கள் எடுத்து கொண்டு, மீதமுள்ள 130 ரூபாய் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் கிராமப்புறங்களில் தங்கி சேவை திட்டங் களை நடத்த 10 நாட்கள் முகாம் நடத்தப்படும். உணவு, உறைவிடம் இந்த நிதி ஒதுக்கீட்டுக்குள் தான் செயல்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வால் இது சாத்தியமில்லை. ஆதலால், தற்போது கிராமப்புற முகாமை 7 நாட்களாக குறைத்துவிட்டனர். இருந்தும் நிதி இல்லாத நிலை தான்.
தனியார் பள்ளி, கல்லூரிகள் சமாளிப்பு: கிராமப்புற முகாம்களை நடத்தும் நாட்டு நலப்பணித்திட்டத்தில் அரசு பள்ளி, கல்லூரிகள்தான் திண்டாட்டத்தில் உள்ளனர். தனியார் கல்லூரி, பள்ளி நிர்வாகங்கள் தங்களிடம் உள்ள நிதியினை வழங்கி சமாளித்து விடுகின்றனர். அரசு பள்ளிகளோ ஸ்பான்சர் தேடும் நிலை. பல அரசு பள்ளி, கல்லூரிகளில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களே கையிலிருந்து பணம் செலவழித்து வருகின்றனர். மத்திய, தமிழக அரசுகள் ஒதுக்கீடு செய்யும் தொகையை அதிகரித்து வழங்க முன் வர வேண்டும்.
