UPDATED : டிச 28, 2009 12:00 AM
ADDED : டிச 28, 2009 06:06 PM
திண்டுக்கல்: வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள, ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கான பெயர் பட்டியலில், அதிக குளறுபடி காணப்படுகிறது.
மாநிலம் முழுவதும் 231 ஓவிய ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு பயிற்சித்துறை இயக்குனரகம் 1:5 என்ற அடிப்படையில் பதிவு மூப்பு பட்டியல் தேர்வு செய்து ‘இன்டர்நெட்’டில் வெளியிட்டுள்ளது. இந்த கணக்குப்படி மொத்தம் 1155 பேர் பட்டியல் வெளியிட வேண்டும். ஆனால் 34 பேர் குறைவாக 1121 பேர் பட்டியல் மட்டுமே வெளியாகி உள்ளது. இதிலும் 14 பேர் பெயர் இரண்டு முறையும், 10 பேர் பெயர் மூன்று முறையும் வெளியாகி உள்ளது.
பதிவு மூப்பு அடிப்படையில் பி.சி.ஓ., பிரிவை சேர்ந்தவர்கள், 1970 ஜூன் 4க்கு பின், பிறந்து 1991 ஏப்., 5ம் தேதிக்கு முன் பதிவு செய்திருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பட்டியலில் 1974 ஜூலை 31க்கு பின் பிறந்தவர்கள், 1993 மே 17ம் தேதிக்கு பின் பதிவு செய்தவர்கள் பட்டியலும் வெளியாகி உள்ளது. அதேபோல் முன்உரிமை பட்டியலில் ஒரு சில இடங்களே நிரப்பப்பட உள்ளன. ஆனால் விதிமுறைக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் நபர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதனால் முன்உரிமை இல்லாதவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குளறுபடிகளை தவிர்த்து, சரியான பட்டியலை வெளியிட வேண்டும் என ஓவிய ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
