UPDATED : டிச 30, 2009 12:00 AM
ADDED : டிச 30, 2009 11:06 AM
இந்த விவகாரத்தில், ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. தனியார் பள்ளிகளில் தாறுமாறாக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து, ஏராளமான புகார்கள் குவிந்ததால், கட்டணங்களை முறைப்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இக்குழு, மாநிலம் முழுவதும் பெற்றோர், கல்வியாளர்கள், பள்ளி நிர்வாகிகளை சந்தித்து, கருத்துகளை கேட்க உள்ளது. அதன்பின், பள்ளிகளின் அமைவிடம், அவற்றின் உள் கட்டமைப்பு வசதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, வரும் கல்வியாண்டிற்கு புதிய கட்டணத்தை நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே, வழக்கம்போல், மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே பல பள்ளிகள் துவக்கின. அடுத்த கல்வியாண்டுக்கான கட்டணத்தை முழுவதுமாக வசூலிக்கவும் திட்டமிட்டன. இப்போதே கட்டணத்தை வசூலித்தால், புதிய கட்டணம் நிர்ணயிக்கும்போது, குழப்பம் ஏற்படும் என்பதால், முன்கூட்டி சேர்க்கைக்கு, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மணி தடை விதித்தார்.
மாநிலம் முழுவதும் உள்ள மெட்ரிக் பள்ளிகளுக்கு, இயக்குனரின் உத்தரவு அனுப்பப்பட்டது. இதனால், முன்கூட்டி நடைபெறும் மாணவர் சேர்க்கைப் பணிகளை பெரும்பாலான பள்ளிகள் நிறுத்தியுள்ளன. கட்டண நிர்ணயிப்புக் குழு, எவ்விதமான கட்டணத்தை நிர்ணயிக்குமோ என்று, பள்ளி நிர்வாகத்தினர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனால், மாணவர் சேர்க்கைக்கான தடையை நீக்க வேண்டும் என்று, பல்வேறு சங்கங்கள் அரசை வலியுறுத்தி வருகின்றன.மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் டேனியல், பொதுச் செயலர் வெங்கடாசல பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள், சில தினங்களுக்கு முன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசை சந்தித்து, மாணவர் சேர்க்கைக்கான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மாணவர் சேர்க்கையை, கோடை காலத்தில் ஆரம்பித்தால், அதில் உள்ள பிரச்னைகளை அவர்கள் எடுத்துக் கூறினர். வெங்கடாசல பாண்டியன் கூறுகையில், ‘பிளஸ் 1 தவிர மற்ற வகுப்புகளுக்கான சேர்க்கையை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
நாங்கள் வசூலித்த கட்டணத்தை விட, குழு நிர்ணயிக்கும் கட்டணம் குறைவாக இருந்தால், அதிக தொகையை திருப்பித் தரவோ அல்லது அடுத்த கல்வி கட்டணத்தில் சரிசெய்து கொள்ளவோ தயாராக இருக்கிறோம். அரசால் நியமிக்கப்பட்ட குழு, கட்டணத்தை நிர்ணயிக்கும்போது, பள்ளி நிர்வாகிகளின் கருத்துக்களையும் கேட்க வேண்டும்’ என்றார்.
இப்பிரச்னை தொடர்பாக, ஓரிரு நாளில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு சில நிபந்தனைகளை விதித்து, சேர்க்கையை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படலாம் என, கூறப்படுகிறது. அரசு நிர்ணயித்துள்ள குழு, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் இன்று கூடி, கட்டணம் நிர்ணயிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்துகிறது.
அதில் பங்கேற்க, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக, எந்தெந்த தேதிகளில் பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள், அதில் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
