பல்கலைகளில் பணியிடங்கள்: தாமதமாக துவங்கியது நியமன நடவடிக்கை
பல்கலைகளில் பணியிடங்கள்: தாமதமாக துவங்கியது நியமன நடவடிக்கை
UPDATED : ஜூன் 26, 2023 12:00 AM
ADDED : ஜூன் 26, 2023 11:38 AM
தமிழக உயர் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அண்ணா பல்கலை, ஆசிரியர் கல்வியியல் பல்கலை, பாரதியார், பாரதிதாசன், மனோன்மணியம் சுந்தரனார், பெரியார், அண்ணாமலை, அழகப்பா, திருவள்ளுவர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை ஆகிய, 10 பல்கலைகளில், பதிவாளர் பதவிக்கான பணியிடங்கள் மாதக்கணக்கில் காலியாக உள்ளன. தஞ்சை தமிழ் பல்கலை, சட்ட பல்கலை, உடற்கல்வியியல் பல்கலை ஆகியவற்றிலும் பதிவாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களால், பல்கலைகளின் மற்ற பேராசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர, பல பல்கலைகளில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடங்களும் காலியாக உள்ளன.முக்கிய பணியிடங்கள் காலியாக உள்ளதால், ஆட்சியாளர்கள் அல்லது அதிகாரிகள், குறுக்கு வழியில் பல்வேறு நிர்வாக பணிகளை மேற்கொள்ளும் அபாயம் உள்ளதாக, பேராசிரியர்கள் கவலை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தி.மு.க., ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின், இந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சட்ட பல்கலை, அழகப்பா பல்கலை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை ஆகியவற்றில், பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பணிக்கு தகுதியானவர்களை நியமிக்கும் பணிகள் துவங்கி உள்ளன.இதற்கான விண்ணப்ப பதிவு தேதி மற்றும் தகுதி குறித்த விபரங்களை, சம்பந்தப்பட்ட பல்கலைகள், தங்களின் இணைய தளத்தில் வெளியிட்டுஉள்ளன.
