UPDATED : ஜூன் 28, 2023 12:00 AM
ADDED : ஜூன் 28, 2023 03:24 PM
சென்னை:
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, 1,021 உதவி டாக்டர்கள், 986 மருந்தாளுனர் பணியிடங்களுக்கான தேர்வின் முடிவுகள், ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, 1,021 உதவி டாக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை, இந்தாண்டு ஏப், 25ல், மருத்துவ பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. எம்.பி.பி.எஸ்., முடித்த 25,000 டாக்டர்கள், தேர்வில் பங்கேற்றனர். அதேபோல் 986 மருந்தாளுனர் பணியிடங்களுக்கான தேர்வு ஏப்., 26, 27 ல் நடந்தது. பி.பார்ம்., டி.பார்ம்., படித்த 50,000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தேர்வு எழுதினர். இந்நிலையில், தேர்வுகளுக்கான விடை குறிப்புகளை, www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், ஒருவாரத்திற்குள் தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளதாகவும், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வாவோருக்கு, சான்றிதழ் சரிப்பார்ப்பு, கலந்தாய்வின் வாயிலாக பணி நியமனம் நடைபெறும்.
