தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘பள்ளிகளில் தலா ஒரு மாணவருக்கு அறிவியல் விருது’

‘பள்ளிகளில் தலா ஒரு மாணவருக்கு அறிவியல் விருது’

‘பள்ளிகளில் தலா ஒரு மாணவருக்கு அறிவியல் விருது’


UPDATED : ஜன 04, 2010 12:00 AM

ADDED : ஜன 04, 2010 10:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 04, 2010 12:00 AM ADDED : ஜன 04, 2010 10:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய அறிவியல் காங்கிரசின் 97வது மாநாடு திருவனந்தபுரத்தில் <உள்ள கேரள பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று துவங்கியது. ஜன. 7ம் தேதி வரை நடக்கவுள்ள இம்மாநாட்டை, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று துவக்கி வைத்தார்.


அப்போது அவர் பேசியதாவது:
அறிவுசார் வல்லரசாக 21ம் நூற்றாண்டில் இந்தியா மீண்டும் மாற வேண்டும் என்றால், இந்தியா அறிவியல் தொழில்நுட்பத்தில் வலுவான நிலையை எட்ட வேண்டும். அறிவியல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், அதற்கான கல்வி சூழ்நிலையை உருவாக்கவும் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு அதிக முதலீடு செய்து வருகிறது.


நம் பழைய சவால்களான உணவு பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவற்றுடன் புதிய சவாலான  உலக வெப்பமயமாதல், நீர்வள ஆதாரம் ஆகியவையும் சேர்ந்து கொண்டுள்ளன. இவற்றில் நாம் வெற்றியடைவது நமது கல்வி நிறுவனங்களின் தரத்தையும், அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும் பொறுத்தே அமையும்.


உலக வெப்பமயமாதல் குறித்து கோபன்ஹேகனில் கடந்த மாதம் நடந்த மாநாட்டில் உலக தலைவர்கள் பங்கேற்றனர். அந்த மாநாட்டின் முடிவுகள் யாருக்கும் திருப்தியை தரவில்லை.


மரபுசாரா எரிசக்தியின் பங்கு அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில் அணுமின் சக்தி திட்டங்கள் செயல்பட துவங்கியுள்ளன. வரும் 2020ம் ஆண்டில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் ஜவகர்லால் நேரு சூரிய ஒளி மின் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.


சூரிய ஒளி ஆராய்ச்சிக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் பிரிட்டனுடன் சேர்ந்து அறிவுசார் இணைப்பு திட்டத்தை துவக்கி உள்ளோம். நீராதார மேம்பாடு மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. நீர் வளம் குறித்த 25 முக்கிய பிரச்னைகளை பட்டியலிட்டு, 20 நதிநீர் படுகைகளில் 60 இடங் களில் நீராதார மேம்பாட்டுக்காக முன்னோடி திட்டங்களை துவக்கி உள்ளோம்.


பயோடெக்னாலஜி துறையின் வளர்ச்சி மேம்பட்ட பயிர்களை உருவாக்க உதவி வருகிறது. மரபணு மாற்றப்பட்ட பருத்தி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தேவையான கட்டுப்பாடு முறைகளை கொண்டு வர வேண்டும். சி.எஸ்.ஐ.ஆர்., அமைப்பு மரபணு வரைபடம் தயாரித்து வெற்றி கண்டுள்ளது பெருமை கொள்ளத்தக்கதாக அமைந்துள் ளது. பன்றிக் காய்ச்சல் வைரசுக்கு உடனே சோதனை முறையை கண்டறிந்து வழங் கிய டி.ஆர்.டி.ஓ., அமைப்பை பாராட்டுகிறேன். இதுபோன்ற, திடீரென பரவும் நோய்களுக்கு உடனடி தீர்வு காண்பதில் நாம் அறிவியல் பூர்வமான பாதுகாப்பு முறையை உருவாக்க வேண்டும்.


புதிய திட்டம்: பள்ளி மாணவர்களை அறிவியல் துறையில் ஊக்குவிக்க, ‘இன்ஸ்பயர்’ என்ற புதிய திட்டத்தை விரைவில் அறிவிக்க உள்ளோம். இதன்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும், 10 முதல் 15 வயதுக்குட்பட்ட தலா ஒரு மாணவரை தேர்வு செய்து அறிவியல் விருது வழங்க திட்டமிட்டுள்ளோம்.


டாக்டர் பட்டம் மற்றும் அதற்கு மேல் படிப்புகளில் மாற்றம் கொண்டு வரவும், ஆராய்ச்சி மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. மகளிர் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளோம். தேசிய அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் ஆய்வு வாரியம் வரும் மார்ச்சுக்குள் செயல்பட துவங்கும். அறிவுசார் சட்ட மசோதா ஒன்று பார்லிமென்டில் விரைவில் விவாதத்திற்கு வரவுள்ளது.


நோபல் பரிசுபெற்ற இந்தியர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனை பாராட்டுகிறேன். இந்திய விஞ்ஞானிகளுக்கு அரசு அமைப்புகளிடம் இருந்து தேவைப்படும் சுதந்திரம் குறித்து அவர் பேசியதை கவனத்தில் கொண்டுள்ளேன். கூடுதல் சுதந்திரம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை நம் அறிவியல் அறிஞர்கள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.


அறிவியல் அறிஞர்கள் சமூகத்திற்கு தேவைப்படும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும். ஐ.ஐ.டி., போன்ற கல்வி மையங்கள் 21ம் ஆண்டின் தொழில்நுட்ப சவால்களை சந்திக்க உதவ வேண்டும். நமது விஞ்ஞானிகளுக்கு வெளி உலகத்துடன் போட்டியிடும் வகையில் வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.


விஞ்ஞானிகள் 13 பேருக்கு அறிவியல் விருதுகளை பிரதமர் வழங்கினார். பல நாடுகளைச் சேர்ந்த நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானிகள், அறிவியல் துறை பேராசிரியர்கள், இளம் அறிவியல் அறிஞர்கள் என பலர் மாநாட்டில் பங்கேற்றனர். அறிவியல் கண்காட்சி ஒன்றையும் பிரதமர் துவக்கி வைத்தார். கேரள பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெயகிருஷ்ணன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us