இந்திய வம்சாவளி சிறுமிக்கு பிரிட்டனின் உயரிய விருது
இந்திய வம்சாவளி சிறுமிக்கு பிரிட்டனின் உயரிய விருது
UPDATED : ஜூலை 22, 2023 12:00 AM
ADDED : ஜூலை 22, 2023 08:45 AM
லண்டன்:
மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு எதிராக, மூன்று வயது முதல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதற்காக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, ஏழு வயதான இங்கிலாந்து சிறுமிக்கு, பாயிண்ட் ஆப் லைட் விருது வழங்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தைச் சேர்ந்த, இந்திய வம்சாவளியினரான, சவுரவ் ராய் மற்றும் ராகினி ஜி ராய் தம்பதியரின் மகள், மோக்-ஷா, 7. உலகின் இளம் வயது வழக்கறிஞர் எனப்பெயர் பெற்ற இவருக்கு, கடந்த வாரம், பிரிட்டனின் உயரிய விருதான பாயிண்ட் ஆப் லைட் அந்நாட்டின் துணை பிரதமரான ஆலிவர் டவுடனால் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கல்வி கிடைப்பதற்காக, பல்வேறு விதங்களில் உதவியுள்ள மோக்-ஷாவிற்கு, குழந்தைகளின் கல்விக்காக நிதி திரட்டியதற்காகவும், இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.துணை பிரதமர், ஆலிவர் டவுடன் கூறியுள்ளதாவது:
மூன்று வயதிலிருந்து, மைக்ரோ பிளாஸ்டிக் மாசுபாட்டிக்கு எதிராக, மோக்-ஷா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். ஐ.நா.,வின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை வென்றெடுப்பதில், மோக்-ஷா ஒரு சிறந்த முன்மாதிரியை அமைத்துள்ளார். பள்ளி பாடத்திட்டத்தில், அவற்றை சேர்ப்பது குறித்து, ஊக்குவிக்க உலக தலைவர்களுடன், அவர் பேசியுள்ளார்.மோக்-ஷாவின் முயற்சியால் அவரது பள்ளியிலும், பிளாஸ்டிக் கலை பொருட்கள் பயன்பாடு தடுக்கப்பட்டுள்ளது. அவரின், வலுவான நம்பிக்கைகள், சிறந்த உலகை உருவாக்க தன்னை சுற்றியுள்ளவர்களை, மாற்றும் திறன் கொண்டவையாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
மோக்-ஷா கூறியுள்ளதாவது:
விருதை பெறுவதில், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பூமியை பாதுகாப்பது என்பது, பல் துலக்குவது போல தான். இந்த பூமியையும், இங்கு வாழும் மக்களையும், பாதுகாக்கும் பொறுப்பு, ஒரு சிலருக்கு மட்டும் இருக்கக்கூடாது. இதை, அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பருவநிலை மாற்றம், மாசுபாடு, வறுமை மற்றும் சமத்துமின்மை போன்ற, பெரிய சவால்களை எதிர்த்து போராட, நாம் ஒவ்வொருவரும், நம் சொந்த வாழ்க்கையில், சிறிய மாற்றங்களையாவது செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
