நடப்பாண்டில் புதிய மாதிரி பாடத்திட்டம் : உயர்கல்வித்துறை
நடப்பாண்டில் புதிய மாதிரி பாடத்திட்டம் : உயர்கல்வித்துறை
UPDATED : ஜூலை 26, 2023 12:00 AM
ADDED : ஜூலை 26, 2023 09:09 AM
சென்னை:
நடப்பாண்டு முதல் புதிய மாதிரி பாடத்திட்டம், தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என, தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.உயர்கல்வித்துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
உயர்கல்வி நிறுவனங்களிடையே இடமாறுதல் கோரும் மாணவர்கள், பயன்பெறும் வகையில், மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இளநிலை பட்டப்படிகளில், ஐந்து பாடப்பிரிவுகள் இடம்பெறும். இந்த புதிய மாதிரி பாடத்திட்டத்தால் பல்கலை மற்றும் தன்னாட்சி கல்லுாரிகளுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆசிரியர்களின் பணிநிலையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதன்படி, முக்கிய பாடங்களையும், விருப்ப பாடங்களையும், செய்முறை பயிற்சிகளையும் பருவங்களுக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.பல்கலைகளும், தன்னாட்சி கல்லுாரிகளும் தங்களின் விருப்பத்திற்கேற்ப மதிப்பீடுகளில் மாற்றங்கள் செய்து கொள்ள உரிமை உண்டு. பாடத்திட்டம் தொடர்பாக, ஆக.,2ம் தேதி அனைத்து தன்னாட்சி கல்லுாரி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தில் மாணவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோராகும் விதமாக, திறன் மேம்பாட்டு அம்சங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில், ஏதேனும் நடைமுறை சிக்கல் இருந்தால், ஆண்டு இறுதியில் கல்வியாளர்களுடன் கலந்தாலோசித்து சரிசெய்யப்படும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
