தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சீருடை, புத்தக கட்டண விவகாரம்: எதிர்த்து அப்பீல்

சீருடை, புத்தக கட்டண விவகாரம்: எதிர்த்து அப்பீல்

சீருடை, புத்தக கட்டண விவகாரம்: எதிர்த்து அப்பீல்


UPDATED : ஜூலை 30, 2023 12:00 AM

ADDED : ஜூலை 30, 2023 09:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2023 12:00 AM ADDED : ஜூலை 30, 2023 09:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான சீருடை, புத்தக கட்டணத்தையும் வழங்கும்படி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் பள்ளி கல்வித் துறை மேல்முறையீடு செய்துள்ளது.தற்போதைய நிலை தொடர, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில், ஏழை எளிய மாணவர்களை சேர்க்க வேண்டும். அதற்கான கல்வி கட்டணத்தை, அரசு வழங்கும். அவ்வாறு, 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், வேலுார் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, புவனேஸ்வரிபேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் சேர்ந்த மாணவருக்கு பாடப்புத்தகம், சீருடை வழங்காததால், அவரது தந்தை வழக்கு தொடர்ந்தார்.கல்விக் கட்டணம்
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களின் கல்விக் கட்டணம் மட்டுமின்றி, புத்தகம் மற்றும் சீருடைக்கான கட்டணங்களையும், தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, பள்ளி கல்வித் துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவில் கூறியிருப்பதாவது:
அரசு பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு, இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. புத்தகம், சீருடைகளுக்கான கட்டணம், பள்ளிக்கு பள்ளி மாறுபடுகிறது. ஏற்கனவே, தனியார் பள்ளிகளில், கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு வழங்குகிறது. சீருடை மற்றும் புத்தக கட்டணத்தையும் சேர்த்து வழங்கினால், அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும். கடந்த, 2013ல் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 49,864 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்காக, 22.77 கோடி ரூபாயை அரசு வழங்கியது. 2021 - 22ம் ஆண்டில் 56,687 மணவர்கள் சேர்க்கப்பட்டனர்; 364.44 கோடி ரூபாயை அரசு வழங்கி உள்ளது.உத்தரவுக்கு தடை
சில மாநிலங்களில் கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை; ஆனால், தமிழகத்தில் இந்தச் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்துகிறோம். எனவே, உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை, உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. பள்ளி கல்வித் துறை சார்பில், அரசு பிளீடர் முத்துக்குமார் ஆஜரானார். விசாரணையை, செப்டம்பர் 14க்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது. அதுவரை, தற்போதைய நிலை தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us