UPDATED : ஆக 05, 2023 12:00 AM
ADDED : ஆக 05, 2023 10:45 AM
சென்னை:
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு, அரசு மருத்துவர் பணியில் முன்னுரிமை கோரிய மனுவை, தமிழக அரசு பரிசீலிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் உதயகுமார், மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியைச் சேர்ந்த டாக்டர் சங்கரலிங்கம் உள்ளிட்ட 17 மருத்துவர்கள் தாக்கல் செய்த மனுவில் உதவி மருத்துவர்கள் பணிக்கான 1,021 காலியிடங்களை நிரப்புவதற்கு, 2022 அக்டோபரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில், தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படுவது குறித்து குறிப்பிடவில்லை. நாங்கள், பிளஸ் 2 வரை தமிழ் வழியில் படித்தவர்கள். எங்களுக்கு, 20 சதவீதம் ஒதுக்கப்படவில்லை. 20 சதவீத ஒதுக்கீடு கோரிய மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மனு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் எஸ்.தங்கசிவன் ஆஜராகி, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். 20 சதவீத ஒதுக்கீடு பெற உரிமை உள்ளது என்றார். அரசு தரப்பில், சிறப்பு பிளீடர் பி.பாலதண்டாயுதம்; மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் சார்பில், வழக்கறிஞர் லோகநாத் ஆஜராகினர். நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், மருத்துவர் தேர்வு நடவடிக்கைக்கு தடை கோரியிருந்தாலும், நியமன நடவடிக்கை துவங்குவதற்கு முன், தங்களின் கோரிக்கை மனுவை பரிசீலிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டால் போதுமானது என, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தங்கசிவன் தெரிவித்தார். எனவே, புதிதாக மனு அளிக்க வேண்டும். அதை அரசு பரிசீலித்து, தகுதி அடிப்படையில் ஒரு மாதத்துக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
