UPDATED : ஜன 11, 2010 12:00 AM
ADDED : ஜன 11, 2010 10:47 AM
"சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரும் ஆண்டு முதல், பகுதி நேர எம்.பி.ஏ., படிப்பு துவக்கப்படும்,&'&' என சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தர் திருவாசகம் தெரிவித்தார். சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்துறையைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற, "அலுமினி சந்திப்பு&' பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. இதில், 150க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்ககேற்று, தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், சென்னைப் பல்கலை நிர்வாக படிப்புத் துறையில், சிறப்பாக பணியாற்றிய முன்னாள் பேராசிரியர்கள் அனந்தராமன், சீனிவாசன் மற்றும் சம்பங்கி கவுரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, துணை வேந்தர் திருவாசகம் பேசியதாவது: சென்னைப் பல்கலைக்கழகம், 152 ஆண்டு பழமை வாய்ந்தது. இந்திய வரலாற்றில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைவரும் ஒரு குறிக்கோளை முன்வைத்தே போராடினர். அது ஒருங்கினைந்த சுதந்திர இந்தியா.
கடந்த 1839ம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை மாகாணத்தில் உள்ள மக்கள் கோரிக்கை மனு ஒன்றை, அப்போதைய ஆட்சியாளர் லார்டு ஜான் எல்பின் ஸ்டோனிடம் கொடுத்தனர். அதில் சென்னை மாகாண மக்கள் பயன்பெறும் வகையில், கல்வி வளர்ச்சிக்காக கல்லூரி ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டது தான் தற்போதைய பிரசிடென்சி கல்லூரி. இதன் தொடர்ச்சியாக, 1857ம் ஆண்டு தொடங்கப்பட்டது சென்னைப் பல்கலைக்கழகம்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில், எம்.பி.ஏ., படித்து பெருமை சேர்த்தவர்களில் பெரும்பான்மையானோர் பகுதி நேரத்தில் படித்தவர்கள் என்பது தெரியவந்தது. வரும் ஆண்டு முதல் எம்.பி.ஏ., பகுதி நேர படிப்பு சென்னைப் பல்கலையில் துவக்கப்பட உள்ளது. இந்த உலகம் போட்டிகள் நிறைந்த உலகம். போட்டி, வேலை வாய்ப்பில் மட்டும் இல்லாது கல்வியிலும் உள்ளது. நாம் படிக்கும் படிப்பின் மூலம் பிறருக்கு உதவும் வகையில் நமது செயல்திட்டங்கள் அமைய வேண்டும். இவ்வாறு திருவாசகம் பேசினார். இந்நிகழ்ச்சியில், சென்னைப் பல்கலைக்கழக நிர்வாக படிப்புத்துறையின் தலைவர் சீனிவாசன், முன்னாள் நிர்வாக படிப்புத் துறையின் தலைவர் சிவஞானம் மற்றும் முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.
