சென்னையில் பயிற்சி பெற்ற மேகாலயா டாக்டர்களுக்கு சான்று
சென்னையில் பயிற்சி பெற்ற மேகாலயா டாக்டர்களுக்கு சான்று
UPDATED : ஆக 10, 2023 12:00 AM
ADDED : ஆக 10, 2023 10:34 AM
சென்னை:
சென்னையில் இரண்டு அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெற்ற 29 மேகாலயா டாக்டர்களுக்கு சான்று அளிக்கப்பட்டுள்ளது.தமிழக மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் மேகாலயா சுகாதாரத்துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்தாண்டு போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, 29 மேகலாயா டாக்டர்களுக்கு சென்னை திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனை; எழும்பூர் அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மயக்க மருத்துவம், பேறுகால அவசர சிகிச்சை மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் ஆகியவற்றில் 6மாதகால பயிற்சிகள் அளிக்கப்பட்டது.இந்நிலையில், திருவல்லிக்கேணி அரசு கஸ்துாரிபா காந்தி மருத்துவமனையில் பயிற்சியை நிறைவு செய்த 29 டாக்டர்களுக்கு, அதற்கான சான்றை, அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார். அப்போது மேகாலயா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மேசல் அம்பரீன் லிங்டோ உடனிருந்தார். பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
தமிழகத்தில் வேறொரு மாநில டாக்டர்களுக்கு பயிற்சி அளிப்பது இதுவே முதல்முறை. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்பட்டால், தமிழக சுகாதாரத்துறையின் அனுபவம், மேகலாயா மாநிலத்தின் மருத்துவ துறையின் மேம்பாட்டுக்கு பயன்படும். தேசிய அளவில் மேகாலயா மாநிலத்தில் மகப்பேறு இறப்பு சதவீதம் மற்றும் பச்சிளம் குழந்தை இறப்பு சதவீதம் குறைய தமிழக அரசின் பங்களிப்பாக பயிற்சி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
