தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆழ்கடல் வளங்களை கண்டறிய சமுத்ரயான் திட்டம்: ஜனாதிபதி

ஆழ்கடல் வளங்களை கண்டறிய சமுத்ரயான் திட்டம்: ஜனாதிபதி

ஆழ்கடல் வளங்களை கண்டறிய சமுத்ரயான் திட்டம்: ஜனாதிபதி


UPDATED : அக் 28, 2023 12:00 AM

ADDED : அக் 28, 2023 05:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2023 12:00 AM ADDED : அக் 28, 2023 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ஆழ்கடல் வளங்களை கண்டறிய, சமுத்ரயான் திட்டம் தயாராகி வருவதாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.சென்னை அருகே உத்தண்டியில் உள்ள இந்திய கடல்சார் பல்கலையின், 8வது பட்டமளிப்பு விழா, நேற்று பல்கலை வளாகத்தில் நடந்தது. இதில், ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பட்டங்கள் வழங்கினார்.பின், அவர் பேசியதாவது: 
பொதுவாக கடலை ஆள்பவர்கள், உலகை ஆள்பவர்கள் என்ற பழமொழி, நம் அனைவருக்கும் தெரியும். நம் நாட்டில், கன்ட்லா முதல் கோல்கட்டா வரையிலான கடல் மார்க்கம், உலகின் அனைத்து பகுதிகளையும் இணைக்கக் கூடியது.தென் மாநிலங்களை ஆண்ட பல்லவர்கள், சக்திவாய்ந்த கடற்படையை கொண்டிருந்தனர்; சோழர்களும் கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கினர். தமிழகம், மாலுமிகளின் நிலமாக உள்ளது.தென் கிழக்கு ஆசியாவுக்கும், தென் மாநிலங்களுக்கும் இடையிலான வணிக மற்றும் கலாசார தொடர்புகளுக்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. முன்பு, கலிங்கர்கள் என்று கூறப்பட்ட ஒடிசா மக்கள், கடல் மார்க்கமாகவே, தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்று வந்தனர். இந்தியாவின் முன்னேற்றத்துக்கு, கடல் வழி வணிகம் முக்கிய பங்காற்றுகிறது.கடல்சார் பொருளாதாரம், 40 லட்சத்துக்கும் அதிகமான மீனவர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. 2.50 லட்சம் மீன்பிடி படகுகளுடன், மீன் உற்பத்தியில் நம் நாடு பெரிய நாடாக உள்ளது. கடந்த, 200 ஆண்டு கால காலனி ஆதிக்க ஆட்சியின் முடிவில், நாட்டின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்தினோம்.வலுவான கடலியலை ஏற்படுத்துவதில், நாம் பொருளாதார மற்றும் தொழில் துறை ஆதாரங்களில் பின்தங்கி இருக்கிறோம். இந்த துறையில் நாம் முழு திறனை வெளிப்படுத்தும் முன், பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, நம் கடல் ஆழ கட்டுப்பாட்டு விதிகளால், ஏராளமான சரக்கு கப்பல்கள், அருகில் உள்ள நாடுகளுக்கு திருப்பி விடப்படுகின்றன.சர்வதேச குறியீடுகளை சமன் செய்யும் அளவுக்கு, இந்திய துறைமுகங்களின் செயல்பாட்டு திறன் மேம்பட வேண்டியுள்ளது. சர்வதேச துறைமுகங்களின் தரவரிசை பட்டியலில், முதல் 20 இடங்களுக்குள் இந்தியா வர முடியவில்லை. சர்வதேச பட்டியலில், 50 சிறந்த கன்டெய்னர் துறைமுகங்களில், இந்தியாவில் இரண்டுதான் இடம் பெறுகின்றன.இந்திய துறைமுகங்கள் அடுத்த கட்டத்துக்கு செல்லும் முன், கட்டமைப்பு, செயல் திறன் சவால்கள் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டும். நமது பெரும்பாலான மீனவ படகுகள், இன்னும் இயந்திர மயமாக்கப்படவில்லை. இந்நிலையில், சாகர்மாலா திட்டம், துறைமுக முன்னேற்றத்துக்கு பெரும் உதவிகரமாக உள்ளது. இந்த மாதம் நடந்த சர்வதேச கடலியல் மாநாட்டின் வாயிலாக, 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, இந்தியாவுக்கு முதலீடு பெறப்பட்டுள்ளது.சந்திரயான் - 3 விண்கலத்தின் வெற்றியை தொடர்ந்து, சமுத்ரயான் திட்டத்துக்கு தயாராகி வருகிறோம். கடல் ஆழத்தில், 6,000 மீட்டர்களுக்கு கீழே உள்ள வளங்களையும், பல்லுயிர் பெருக்கத்தையும் ஆய்வு செய்ய உள்ளோம்.பருவநிலை மாற்றத்துக்கு ஈடு கொடுத்து செயல்பட வேண்டிய சூழல், கடல்சார் துறைகளுக்கு உள்ளன. பட்டம் பெற்ற மாணவர்கள், இந்த சவால்களை எதிர்கொண்டு, நாட்டின் முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டும். நீடித்த மற்றும் திறனுள்ள கடல்சார் பணிகளில் ஈடுபட வேண்டும். நாட்டுக்கும், பல்கலைக்கும் பெருமையை தேடி தர வேண்டும். இவ்வாறு பேசினார்.இந்த விழாவில், கடல்சார் பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளில் படித்த, 1,944 பேர் பட்டம் பெற்றனர். கடல்சார் பல்கலை வேந்தர் சங்கர் தலைமையில் நடந்த விழாவில், மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், இணை அமைச்சர் ஸ்ரீபட் நாயக், தமிழக கவர்னர் ரவி, தமிழக உயர் கல்வி அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்கலை துணை வேந்தர் மாலினி சங்கர் வரவேற்புரை ஆற்றினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us