மெட்ரிக் கல்விக்கு இணையாக ஆங்கிலம்: எஸ்.எஸ்.ஏ.,வின் திட்டம்
மெட்ரிக் கல்விக்கு இணையாக ஆங்கிலம்: எஸ்.எஸ்.ஏ.,வின் திட்டம்
UPDATED : ஜன 26, 2010 12:00 AM
ADDED : ஜன 26, 2010 10:24 AM
தமிழகத்தில் வட்டாரத்திற்கு ஐந்து பள்ளிகள் வீதம், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் மாதிரி பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், புத்தக பூங்கொத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பாடப்பொருள் தொடர்புடைய மற்றும் தொடர்பு இல்லாத புத்தகங்கள், அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது, மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, ஆங்கிலத்தை கற்றுத் தருவதற்கான வித்தியாசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் முறையாக ஆங்கில வழிப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. தகுதிக்கேற்ற ஆங்கில மொழி துணைப்பாட புத்தகம் என்ற தலைப்பில், நான்காம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இவை வழங்கப்படுகின்றன. முதல் வகுப்பிற்கு 21, இரண்டாம் வகுப்பிற்கு 19, மூன்றாம் வகுப்பிற்கு 18, நான்காம் வகுப்பிற்கு 21 என்ற எண்ணிக்கையில் சிறிய அளவிலான புத்தகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. செயல் வழிக்கற்றல் முறையில், மாணவர்கள் எளிதாக அறிந்து கொள்ள வசதியாக, வகுப்பிற்கு ஏற்ற வண்ண அட்டை கொண்டவையாக இவை வடிவமைக்கப்பட்டு உள்ளன.
நான்கு நிலைகளில், ஆங்கில எழுத்து, வார்த்தை அறிமுகம், வாசிப்பு திறன் மேம்பாடு, வார்த்தை உச்சரிப்பு, ஒலி உச்சரிப்பு, எளிய வார்த்தைகள் என பயிற்சி அளிக்கும் வகையில் இவை உள்ளன. புத்தகத்தின் இறுதியில், கடினமான வார்த்தைக்கான தமிழ் அர்த்தங்கள் மற்றும் பாடத்தின் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.
கிராமப்புற மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை, மேம்படுத்துவதற்கான இந்த ஏற்பாட்டில், முழு ஆர்வத்துடன் ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்தால் மட்டுமே, உரிய பலனளிப்பதாக இருக்கும்.
