UPDATED : ஜன 27, 2010 12:00 AM
ADDED : ஜன 27, 2010 10:07 AM
அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.,), மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) மூலம் தேசிய தகுதித் தேர்வு (நெட் தேர்வு) எழுதும் அறிவியல் ஆராய்ச்சி மாணவர்களுக்கான மாணவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
மேலும் அவர்களின் படிப்பு உதவித் தொகையும் விரைவில் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டு வரை சி.எஸ். ஐ.ஆர்., மூலம் ஆறாயிரம் மாணவர்களுக்கு அறிவியல் ஆராய்ச்சிக்காக படிப்பு உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல் 12 ஆயிரம் மாணவர்களுக்கு படிப்பு உதவித் தொகை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
11வது ஐந்தாண்டுத் திட்டத்தில், இதற்காக 444.34 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.கடந்த 2008 டிசம்பர் மற்றும் 2009 ஜூலையில் 87 ஆயிரம் பேர் நெட் தேர்வு எழுதினர். 2009 டிசம்பரில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர் வரை நெட் தேர்வு எழுதியுள்ளனர். மேலும், இப்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக அதிகமான மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சிக்கு அத்துறையையே தேர்ந்தெடுப்பதால் மத்திய அரசு, இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.யு.ஜி.சி., மூலம் இதுவரை 300 மாணவர்களுக்கு மட்டுமே படிப்பு உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது.
இனி 600 மாணவர்களுக்கு படிப்பு உதவித் தொகை வழங்கப்படும். அதேபோல, சி.எஸ்.ஐ. ஆர்., மூலம் படிப்பு உதவித் தொகை பெறும் இள நிலை ஆராய்ச்சியாளர்களின் (ஜே.ஆர். எப்.,) எண்ணிக்கை இரண்டாயிரத்து 400 லிருந்து மூவாயிரமாக அதிகரிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித் துள்ளது.தற்போது இளநிலை ஆராய்ச்சியாளர்கள் மாதம் 12 ஆயிரம் ரூபாயும், முதுநிலை ஆராய்ச்சியாளர்கள் மாதம் 14 ஆயிரம் ரூபாயும் படிப்பு உதவித் தொகையாகப் பெறுகின்றனர். இத்தொகையை முறையே 17 ஆயிரத்து 500 மற்றும் 20 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (டி.எஸ்.டி.,) மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. இதுவும் விரைவில் நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
