மருத்துவ கல்வி இயக்குனர் நியமனத்தில் நிலவும் சிக்கல்
மருத்துவ கல்வி இயக்குனர் நியமனத்தில் நிலவும் சிக்கல்
UPDATED : நவ 03, 2023 12:00 AM
ADDED : நவ 03, 2023 08:38 AM
சென்னை:
மருத்துவ கல்வி இயக்குனர் நியமனத்தில் அதிகாரிகள் மற்றும் அமைச்சரிடையே கருத்து வேறுபாடு காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழக மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனராக இருந்த சாந்திமலர், கடந்த 31ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து பணி மூப்பு அடிப்படையில், மருத்துவமனை முதல்வர்கள் ஆறு பேர், மருத்துவ கல்வி இயக்குனராக நியமிப்பதற்கு தகுதி பெற்றவர்களாக உள்ளனர்.இதற்கிடையே, குற்றப்பின்னணி இல்லாத மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் பணியாற்றக்கூடிய ஒருவரை நியமிக்க வேண்டும் என, அதிகாரிகள் தரப்பில் கோரப்படுகிறது. தனக்கு விருப்பமான ஒருவரை நியமிக்க அமைச்சர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.மேலும், முதல்வருக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், அவர் குறிப்பிடும் அதிகாரியை நியமிக்க வேண்டும் என, வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. இந்த கருத்து வேறுபாடு காரணமாக, மருத்துவ கல்வி இயக்குனர் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர், அரசுக்கு கடிதம் அளித்துள்ளனர். அதில், குற்றப்பின்னணி இல்லாத மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் தகுதியுள்ள நபரை தான், மருத்துவ கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:
மருத்துவ கல்வி இயக்குனராக சாந்தராமன் என்பவர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அப்பணியிடத்திற்கு தகுதியான, அதேநேரம் மாணவர்களின் வளர்ச்சிக்கு பங்காற்ற கூடிய நபரை தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது. அதற்கான பணிகள் விரைவில் முடிவடையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
