பஸ்சில் மாணவர்கள் சாகசம்: அடித்து இறக்கிவிட்ட பெண்
பஸ்சில் மாணவர்கள் சாகசம்: அடித்து இறக்கிவிட்ட பெண்
UPDATED : நவ 04, 2023 12:00 AM
ADDED : நவ 04, 2023 11:08 AM
குன்றத்துார்:
சென்னை போரூரில் இருந்து குன்றத்துார் நோக்கி அரசு பேருந்து ஒன்று நேற்று மாலை சென்றது.பேருந்தின் உள்ளே நிற்பதற்கு இடமிருக்கும் நிலையில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் நின்றும், பேருந்தின் ஜன்னல் கதவில் ஏறி நின்று தொங்கியபடியும் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.இதை பேருந்திற்குப் பின்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர், தன் மொபைல்போனில் வீடியோ எடுத்தார். குன்றத்துார் அருகே கெருகம்பாக்கம் நிறுத்தத்தில் பேருந்து நின்ற போது, ஓட்டுனரிடம் சென்று மாணவர்கள் சாகச பயணம் செய்வது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.மேலும், பேருந்தில் தொங்கியபடி சாகச பயணம் செய்த மாணவர்களை அடித்து, பேருந்தில் இருந்து இறக்கி விட்டார். மேலும், தான் போலீஸ் எனக் கூறிய அந்த பெண் மாணவர்களை ஏன் இதுபோல் பயணம் செய்ய அனுமதிக்கிறீர்கள் என ஓட்டுனர், நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.ஊத்துக்கோட்டை
ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில், நேற்று மாலை, 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பேருந்துக்காக காத்திருந்தனர்.அப்போது சில மாணவர்கள், திடீரென ஒருவரை ஒருவர் சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கிக் கொண்டனர். இதைப் பார்த்த பொதுமக்கள், அச்சத்தில் அலறியடித்து ஓடினர்.இரும்பு கம்பியால் தாக்கிக் கொண்டதில், மாணவன் ஒருவனுக்கு தலையில் ரத்தகாயம் ஏற்பட்டது. ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., கணேஷ்குமார், ஆய்வாளர் ஏழுமலை மற்றும் போலீசார் மாணவர்களை கட்டுப்படுத்தினர். காயமந்த மாணவரை, போலீசார் சிகிச்சைக்காக ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவர்கள் தாக்கிக் கொண்டது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
