வெளி மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்பில் முறைகேடு!
வெளி மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்பில் முறைகேடு!
UPDATED : ஜன 28, 2010 12:00 AM
ADDED : ஜன 28, 2010 12:11 PM
ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், பல ஆண்டுகளாக முறைகேடாக தமிழக மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, தேர்ச்சி பெற வைத்ததை, தமிழக அரசு கண்டுபிடித்துள்ளது. வெளிமாநிலங்களில் கடந்த ஜூன் மாதம் தேர்வெழுதி, அம்மாநில அரசால் திருத்தப்பட்ட விடைத்தாள்களை, சென்னைக்கு வர வைத்து ஆய்வு செய்ததில், 100 சதவீத தேர்ச்சி என்பது பெரிய முறைகேடு என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தமிழக ஆசிரியர்கள் திருத்தியதில் 90 சதவீதம் பேர் தோல்வி அடைந்திருக்கின்றனர். தமிழக ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் இடம் கிடைக்காதவர்கள், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேர்ந்து படிக்கின்றனர். ஆந்திராவில் சராசரியாக 5,000 மாணவர்களும், கர்நாடகாவில் 30 ஆயிரம் மாணவர்களும் ஆண்டுதோறும் சேர்கின்றனர். இவர்கள் அங்கு படிப்பை முடித்ததும், தமிழக அரசிடம் மதிப்பீடு சான்றிதழ் பெற்று, இங்குள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்கின்றனர்.
இந்நிலையில், வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்கள் விவகாரத்தில், தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2008-09 அல்லது அதற்குப் பின், வெளி மாநிலங்களில் சேர்ந்துள்ள மாணவர்களின் சான்றிதழை மதிப்பீடு செய்ய முடியாது என்றும், வெளி மாநில அரசுகள், தமிழக அரசை கோரினால், தமிழ்நாடு மாநில வளக்குழு ஆய்வுக்குப் பின், சான்றிதழ்கள் மதிப்பீடு செய்யப்படும் என்றும், தமிழக அரசு புதிதாக கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.
வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்கள் விவகாரத்தில், தமிழக அரசு இந்த திடீர் நடவடிக்கை குறித்து, துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
இது குறித்து, அரசு ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவர் கூறியதாவது:
ஆந்திரத்தை விட, கர்நாடகாவில் அதிகளவில் தமிழக மாணவர்கள் ஆசிரியர் கல்வி பயில்கின்றனர். கன்னட மொழியில் தேர்வெழுதும் மாணவர்கள், ஆண்டுதோறும் 60 சதவீதம் முதல் 65 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். ஆனால், அங்கு தமிழ் மொழியில் தேர்வெழுதும் மாணவர்கள் மட்டும் 100 சதவீத தேர்ச்சி பெற்று வந்தனர்.
தமிழக மாணவர்களிடம், இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு, பள்ளிகளுக்கு வரத் தேவையில்லை என்று கூறி விடுகின்றனர். தேர்வு நேரத்தில் மட்டும் வந்து, ஏதோ தெரிந்த நாலு வரிகளை எழுதினால் போதும் என்ற நிலை தான், அங்கு இருந்து வந்தது. தமிழகத்தில், புதிய பாடத்திட்டம் தரமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கு, முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுக்கு, தலா ஏழு பாடங்கள் உள்ளன. வெளி மாநிலங்களில் மொத்தமே நான்கு பாடங்கள் தான். அதுவும், பெயரளவில் தான் பாடங்கள் இருக்கும். விடைத்தாள்களை, அங்குள்ள தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி விரிவுரையாளர்கள் தான் திருத்துகின்றனர். அவர்களின் துணையுடன், அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சிக்குரிய மதிப்பெண் களை போட்டு விடுகின்றனர். இந்த நடைமுறை தான், பல ஆண்டுகளாக அங்கு அமலில் இருந்து வருகிறது. வெளி மாநிலங்களில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் இந்த முறைகேடுகளை தடுத்து நிறுத்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, தமிழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
கண்டுபிடிப்பு: அதன்படி, தனியார் பள்ளிகளின் முறைகேடுகள் குறித்து, கடந்த ஆண்டு கர்நாடக அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. மேலும், கடந்த ஜூன் மாதம் இரண்டாம் ஆண்டு தேர்வெழுதிய தமிழக மாணவர்களின் விடைத்தாள்களை தமிழகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொண்டது. அதன்படி, 100 சதவீத தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களின் விடைத்தாள்கள், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதை ஆய்வு செய்தபோது தான், ஒற்றை இலக்க மதிப்பெண்களைக் கூட வாங்காத மாணவர்கள் பலர், 65 மதிப்பெண்கள், 70 மதிப்பெண்கள் பெற்றதாக போடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், ஆசிரியர் கல்வித்துறை விரிவுரையாளர்கள், முறையாக மதிப்பீடு செய்ததில், 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்தனர். இந்த விவரங்கள், அம்மாநில அரசுக்கு தெரிவிக்கப்பட்டு, சம்பந்தபட்ட மாணவர்கள் அனைவரும் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வெளி மாநில ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் முறைகேட்டை தடுக்கவும், தகுதியற்றவர்கள் ஆசிரியர்களாக நுழைவதை தடுக்கவும் தான், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கிடுக்கிப்பிடி போட மாநில வளக்குழு
வெளி மாநிலங்களில், கடந்த 2008-09ம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்கள் மதிப்பீடு செய்ய முடியாது என, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில், சம்பந்தபட்ட வெளி மாநில அரசு, தமிழக மாணவர்களின் சான்றிதழ்களை மதிப்பீடு செய்ய, தமிழக அரசிடம் கோரினால், தமிழ்நாடு மாநில வளக்குழு உரிய நடவடிக்கை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநில வளக்குழு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வித் துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெளி மாநிலங்களிடம் இருந்து கோரிக்கை வந்தால், அம்மாநில பாடத்திட்டங்களை இந்த குழுவில் இடம்பெற்றுள்ள விரிவுரையாளர்கள் ஆய்வு செய்து, மாணவர்களின் சான்றிதழ்களை மதிப்பீடு செய்யலாமா, வேண்டாமா என்று, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யும். இப்படி பல்வேறு கிடுக்கிப்பிடி போடப்பட்டுள்ளதால், வரும் ஆண்டுகளில் வெளி மாநிலங்களில் சேரும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என கூறப்படுகிறது.
