சிவில் நீதிபதி தேர்வில் குளறுபடி: டி.என்.பி.எஸ்சி., விளக்கம்
சிவில் நீதிபதி தேர்வில் குளறுபடி: டி.என்.பி.எஸ்சி., விளக்கம்
UPDATED : நவ 05, 2023 12:00 AM
ADDED : நவ 05, 2023 05:24 PM
சென்னை:
சென்னையில் இன்று(நவ.,5) நடந்த சிவில் நீதிபதிகள் எழுத்து தேர்வில் கேள்வித்தாள் மாறியதால் குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து டி.என்.பி.எஸ்சி., விளக்கம் அளித்துள்ளது.தமிழகத்தில் 245 சிவில் நீதிபதிகள் காலிபணியிடங்களுக்கான தேர்வினை டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது. 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். கடந்த ஆக.,19ல் தமிழகம் முழுவதும் நடந்த முதல்நிலை தேர்வில் சுமார் 10 ஆயிரம் பேர் எழுதினர். இதில் 2544 பேர் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். முதன்மை தேர்வுகள் சென்னையில் 10க்கும் மேற்பட்ட மையங்களில் நடந்தது.இன்று காலை 9 மணிக்கு சிவில் வழக்குகளில் தீர்ப்பு எழுதும் தேர்வு நடந்தது. பிற்பகல் 2 மணிக்கு கிரிமினல் வழக்குகளில் தீர்ப்பு எழுதும் தேர்வும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இன்று காலையில் நடந்த தேர்வில் சிவில் கேள்விகளுக்கு பதிலாக கிரிமினல் கேள்விகள் முழுமையாக வந்து விட்டன. இதனால் தேர்வர்கள் மிகுந்த குழப்பம் அடைந்தனர்.இது குறித்து டி.என்.பி.எஸ்சி., அளித்துள்ள விளக்கத்தில், சென்னை ஐகோர்ட்தான் கேள்வித்தாளை வழங்குகிறது. நாங்கள் விநியோகிக்க மட்டுமே செய்தோம் என தெரிவித்துள்ளது.
