அதிக சம்பளத்தில் வேலை: எம்.பி.ஏ., மாணவர்கள் எதிர்பார்ப்பு
அதிக சம்பளத்தில் வேலை: எம்.பி.ஏ., மாணவர்கள் எதிர்பார்ப்பு
UPDATED : ஜன 28, 2010 12:00 AM
ADDED : ஜன 28, 2010 06:01 PM
இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் ஆண்டுதோறும், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ‘கேம்பஸ் இன்டர்வியூ’ நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம்போல் அடுத்த மாதம் கேம்பஸ் இன்டர்வியூ நடக்க இருக்கிறது. இதற்கிடையில், பிரபல நீல்சன் கம்பெனி, மேலாண்மைக் கல்லூரி மாணவர்களிடையில் நடத்திய ஆய்வு ஒன்றில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக சம்பளத்தை அவர்கள் எதிர்பார்ப்பது தெரியவந்துள்ளது.
ஆண்டுக்கு 13 லட்ச ரூபாய் சம்பளத்தை மாணவர்கள் எதிர்பார்த்தனர். இந்த ஆண்டு 14.6 லட்ச ரூபாய் எதிர்பார்ப்பதாக நீல்சன் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இது கடந்த ஆண்டை விட 13 சதவீதம் அதிகமாகும். ‘சராசரி சம்பளம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்திருப்பது, பொருளாதார மந்தத்தால் ஏற்பட்ட விளைவு’ என்கிறார் கோல்கட்டா ஐ.ஐ.எம். -ன் வெளியுறவு செயலர் ஹரிஹரன்.
இந்த ஆண்டு இன்னும் கூடுதலாக 16 லட்ச ரூபாய் வரை இந்த எதிர்பார்ப்பு அதிகரிக்கலாம் என்றும் தெரிய வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளை விட, 2009 நவம்பரில் தொழில் வளர்ச்சி 11.7 சதவீதமாக அதிகரித்திருப்பதால், முன்பை விட அதிகமான நிறுவனங்கள் நேரடியாக மேலாண்மைக் கல்லூரிகளில் ஆள் எடுப்பதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு, பி.என்.பி., பாரிபாஸ், பர்க்ளேஸ் வங்கி, டி.சி.எஸ்., சிட்டி வங்கி, இன்போசிஸ் மற்றும் பி அண்டு ஜி நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்து கொள்ளக் கூடும் என்று தெரிகிறது. ‘2010-11ல் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் 15 ஆயிரம் பேரைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்’ என்கிறார் இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி கோபாலகிருஷ்ணன்.
