சி.பி.எஸ்.இ., அறிமுகம் செய்யவுள்ள புதிய பாட முறைகள்
சி.பி.எஸ்.இ., அறிமுகம் செய்யவுள்ள புதிய பாட முறைகள்
UPDATED : பிப் 01, 2010 12:00 AM
ADDED : பிப் 01, 2010 04:16 PM
சி.பி.எஸ்.இ., இந்தியாவின் பொதுவாக பாட முறையில் பிளஸ் 2 நிலையில் தொழில் சார்ந்த புதிய படிப்புகளை அறிமுகம் செய்வது தொடர்பாக பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
சி.பி.எஸ்.இ., திரைப்படப் படிப்புகள், திரை விமர்சனம், திரைப்படம் உருவாக்குவது, உணவு மற்றும் பானங்கள் தயாரித்தல், அனிமேஷன் தொடர்பான புதிய நவீன படிப்புகளை பிளஸ் 2 நிலையில் அறிமுகம் செய்ய உள்ளது. தொழிற்துறையினருக்குத் தேவைப்படும் தகுதியும் திறமையும் உடைய மாணவர்களை தயார் செய்வது தான் சி.பி.எஸ்.இ.,யின் குறிக்கோளாக உள்ளது.
இந்தித் திரைப்பட உலகில் புகழ் பெற்ற இயக்குனரான சுபாஷ் கை நடத்தும் ’விஸிலிங் உட்ஸ் இன்டர்நேஷனல்’ திரைப்படம் தொடர்பான படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை வடிவமைப்பதில் சி.பி.எஸ்.இ.,க்கு உதவவுள்ளது. பாடங்களை வடிவமைப்பதுடன் மட்டுமல்லமாது, அவற்றை திறம்பட நடத்துவதற்கு ஆசிரியர்களை பயிற்றுவிப்பதிலும் இந்த நிறுவனம் சி.பி.எஸ்.இ.,யுடன் இணைந்துள்ளது.
இவை விருப்பப் பாடங்களாகவும் தனியான ஒகேஷனல் படிப்புகளாகவும் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதே நிறுவனம் கர்நாடகா மாநிலத்தில் மணிபால் பல்கலைக்கழகத்துடன் இணைந்து எம்.பி.ஏ., மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் படிப்புகளை ஏற்கனவே வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
பள்ளியளவில் அனிமேஷன் படிப்புகளை அறிமுகம் செய்வதையும் சி.பி.எஸ்.இ., தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. மத்திய சுற்றுலாத் துறை, தேசிய மனிதவள மேலாண்மை மற்றும் சுற்றுலா கவுன்சில் ஆகியவற்றுடன் இணைந்து உணவு மற்றும் பானங்கள் தயாரிக்கும் படிப்புகளையும் சி.பி.எஸ்.இ., அறிமுகப்படுத்தவுள்ளது.
மத்திய மனித வள அமைச்சகமும் சி.பி.எஸ்.இ.,யுடன் இணைந்து காப்பீடு, அக்கவுன்டன்சி மற்றும் ரீடெயிலிங் போன்ற படிப்புகளை வழங்குவது குறித்தும் ஆலோசித்து வருகிறது.
