UPDATED : ஏப் 09, 2024 12:00 AM
ADDED : ஏப் 09, 2024 11:50 AM
சென்னை:
பயிற்சி மையம் செல்லாமல், நீட் தேர்வை மாணவர்கள் எழுதும் வகையில், மத்திய அரசு சார்பில் புதிய செயலி அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வும், ஐ.ஐ.டி., போன்ற இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., தேர்வும் நடத்தப்படுகிறது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், இதில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றால் மட்டுமே, விரும்பும் பாடப்பிரிவுகளில் சேர முடியும்.
இந்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற, மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி, தனியார் பயிற்சி மையங்களில் படிக்கின்றனர். இந்த நிலையை மாற்ற, மத்திய அரசு பல்வேறு முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதன்படி, நேஷனல் டெஸ்ட் அப்யாஸ் என்ற மொபைல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. சோதனை அடிப்படையில் இருந்த இந்தச் செயலி, தற்போது முழுமை பெற்று, மாணவர்களின் முழுமையான பயிற்சிக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலியில், ஜே.இ.இ., தொடர்பாக, 193 மாதிரி தேர்வுகளும், நீட் குறித்து, 204 மாதிரி தேர்வுகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. மேலும், ஜே.இ.இ. தேர்வுக்கு, 63 வகை தேர்வுகளும்; நீட் தேர்வுக்கு, 59 வகை தேர்வுகளும் இடம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.