மாணவர் விடுதிகளை விட்றாதீங்க... கல்வியாண்டுக்கு முன் கவனிங்க...
மாணவர் விடுதிகளை விட்றாதீங்க... கல்வியாண்டுக்கு முன் கவனிங்க...
UPDATED : மே 02, 2024 12:00 AM
ADDED : மே 02, 2024 10:06 AM
மதுரை:
மதுரை மாவட்டத்தில் கல்வியாண்டு துவங்குமுன், ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் தேவையான பணியாளர்களை நிரப்புவதுடன், மாணவர்கள் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.
மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் கல்லுாரி மாணவர்களுக்கு 11 விடுதிகள், பள்ளி மாணவர்களுக்கு 36 விடுதிகள் உள்ளன. ஒரு வார்டன், சமையலர், உதவியாளர், காவலர் என ஊழியர்கள் உள்ளனர். கோடை விடுமுறைக்கு பின், புதிய கல்வியாண்டில் சேர்க்கை துவங்கி மாணவர்கள் விடுதிக்கு வருவர்.
பொதுவாக அரசு மாணவர் விடுதிகள் கவனிப்பாரின்றி உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. துவக்கத்தில் முறையாக விடுதியில் தங்கும் மாணவர்கள் நாளாக நாளாக சரியாக தங்குவதில்லை. சில வார்டன்களும், சமையலர்களும் ஒழுங்காக வருவதில்லை. இதனால் பயோமெட்ரிக் முறையை அரசு அமல்படுத்தியது. கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டது.தரமான உணவு உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்தியுள்ளனர்.
இவற்றுடன் மேலும் சில குறைபாடுகளையும் சரிசெய்ய வேண்டியுள்ளது. எல்லா விடுதிகளுக்கும் ஒரு சமையலர் பணியிடம் தேவை உள்ளது. சில விடுதிகளில் வார்டன் பணியிடம் காலியாக உள்ளது. வரும் கல்வியாண்டுக்குள் இவற்றை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே பிரச்னை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிகளிலும் உள்ளது.