UPDATED : மே 30, 2024 12:00 AM
ADDED : மே 30, 2024 10:03 AM

உடுமலை:
உடுமலை முதற்கிளை நுாலகத்தில், வாசகர் படிக்கும் அறை கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது.
உடுமலை முதற்கிளை நுாலகம், மாவட்ட அளவில் மாதிரி நுாலகமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இங்கு வாசகர்கள் அமர்ந்து படிப்பதற்கு தனி அறை, முழுவதுமான டிஜிட்டல் பயன்பாடு, போட்டித்தேர்வர்களுக்கான அறை என, பல்வேறு சிறப்பு வசதிகளுடன் செயல்படுகிறது.
நாள்தோறும், 200க்கும் அதிகமான போட்டித்தேர்வர்கள், 100க்கும் மேற்பட்ட வாசகர்கள் நுாலகத்தை பயன்படுத்துகின்றனர். இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து புத்தகங்கள் படிப்பதால், தற்போதுள்ள படிக்கும் அறையில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பழுதடைந்த நிலையில் பயன்பாடில்லாமல் இருந்த, அறையை புதுப்பிக்க நுாலகத்தின் சார்பில் நுாலகத்துறைக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.
இதன் அடிப்படையில், தற்போது பழுதடைந்த படிக்கும் அறை முற்றிலும் அப்புறப்படுத்தி, புதிய அறை கட்டுவதற்கு மத்திய அரசு, 22 லட்சம் ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், புதிய கட்டடம் கட்டும் பணிகளும் தீவிரமாக நடக்கிறது.