மாணவர்கள் சைக்கிள் பயணம்; போக்குவரத்து நெரிசலால் அவதி
மாணவர்கள் சைக்கிள் பயணம்; போக்குவரத்து நெரிசலால் அவதி
UPDATED : ஜூன் 14, 2024 12:00 AM
ADDED : ஜூன் 14, 2024 07:54 AM
பொள்ளாச்சி :
பொள்ளாச்சி நகரில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோடுகளில், சைக்கிளில் பள்ளி சென்று திரும்பும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, மாணவ, மாணவியர் பலரும், பள்ளி வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களை பயன்படுத்துகின்றனர்.
பல மாணவர்கள், சைக்கிளில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஆனால், கோவை ரோடு, பாலக்காடு ரோடு என, முக்கிய வழித்தடத்தில், அதிகமான போக்குவரத்து நெருக்கடிகளை மாணவர்கள் சந்திக்கின்றனர்.
நகரச் சாலைகளில் இருபுறமுள்ள கடைகளின் ஆக்கிரமிப்பு, போக்குவரத்து விதிமீறல் போன்றவற்றை கடந்து செல்ல வேண்டியுள்ளது. தாறுமாறாக இயக்கப்படும் வாகனங்களால், மாணவர்கள் அச்சத்துடனே பயணிக்கின்றனர்.
எனவே, காலை மற்றும் மாலை நேரங்களில், நெரிசல் மிகுந்த ரோடுகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார், மாணவர்கள் அச்சமின்றி பயணிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் கூறுகையில், நெரிசல் மிகுந்த ரோட்டை கடக்க முற்படும் மாணவர்கள், சைக்கிளில் இருந்து இறங்கி, நடந்து சென்றே அப்பகுதியைக் கடந்து செல்கின்றனர். நெரிசல் மிகுந்த ஒவ்வொரு இடத்திலும் போக்குவரத்து போலீசார் நின்று, மாணவர்கள் பாதுகாப்பாக ரோட்டை கடக்க உதவ வேண்டும், என்றனர்.

