UPDATED : ஆக 13, 2024 12:00 AM
ADDED : ஆக 13, 2024 08:30 AM
ராசிபுரம்:
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் வழியில் படித்து, பிளஸ் 2 தேர்ச்சி பெற்று கல்லுாரியில் சேரும் மாணவர்களுக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும், தமிழ் புதல்வன் திட்டம் தொடக்க விழா ராசிபுரம் அரசு கலைக்கல்லுாரியில் நடந்தது.
கலெக்டர் உமா தலைமை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் முன்-னிலை வகித்தார். அமைச்சர் மதிவேந்தன் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அவர் பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தில், தமிழ் புதல்வன் திட்டத்தில், 12,796 மாணவர்கள் பயன்பெற உள்ளனர் என்றார். எம்.பி., ராஜேஸ்குமார் பேசுகையில், நாமக்கல்லில், 126 கல்லுாகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெற உள்ளனர். இதன் மூலம் உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றார்.
எம்.எல்.ஏ.,க்கள் பொன்னுசாமி, ராமலிங்கம், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் ஆகியோர் நகராட்சி சேர்மன்கள் கவிதா, கலாநிதி, நளினி, ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், கல்லுாரி முதல்வர்கள் பானுமதி, ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.