UPDATED : செப் 17, 2024 12:00 AM
ADDED : செப் 17, 2024 08:53 PM

சென்னை:
கிராமங்களை தத்தெடுத்து, மாணவ, மாணவியர் வாயிலாக மரக்கன்றுகள் நட வேண்டும் என, கல்லுாரிகளுக்கு பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், அடுத்த ஆண்டுக்குள், 140 கோடி மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதை செயல்படுத்தும் வகையில், உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ல், தாய்க்கு ஒரு மரம் என்ற ஸ்லோகத்துடன் பிரதமர் மோடி மரக்கன்றுகளை நட்டார். அதாவது, ஒவ்வொருவரும் தன் தாயை போற்றும் வகையில், ஒரு மரக்கன்றை நட வேண்டும் என்பதே அதன் பொருள்.
இதை நிறைவேற்றும் வகையில், செப்டம்பருக்குள் நாடு முழுதும், 80 கோடி மரக்கன்றுகளை நடும் வகையில், பல்கலைகள் மற்றும் கல்லுாரிகள், தங்கள் மாணவர்கள் வாயிலாக, மரம் நடுவதை இயக்கமாக்க, யு.ஜி.சி., அறிவுறுத்தியது. தற்போது வரை, 50 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இருப்பினும், இலக்கான, 80 கோடி மரக்கன்றுகளை நடும் வகையில், கிராமங்களை தேர்வு செய்து, மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் வகையில் அவற்றை தத்தெடுத்து, சிறப்பு தோட்டக்கலை இயக்கத்தை மும்முரமாக செயல்படுத்தும்படி, பல்கலை மற்றும் கல்லுாரி நிர்வாகங்களை, யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.
மரக்கன்று நடும் விபரங்களை, https://merilife.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றவும் உத்தரவிட்டுள்ளது.