அங்கன்வாடி வேலைக்கு உருது தேவையா; பா.ஜ., கிடுக்கிப்பிடி
அங்கன்வாடி வேலைக்கு உருது தேவையா; பா.ஜ., கிடுக்கிப்பிடி
UPDATED : செப் 24, 2024 12:00 AM
ADDED : செப் 24, 2024 12:31 PM
பெங்களூரு:
அங்கன்வாடி ஆசிரியர் பணிக்கு உருது மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறியுள்ளதற்கு பா.ஜ., கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் மொழி பிரச்னை அவ்வப்போது பூதாகரமாக எழுந்து சர்ச்சையாக மாறிவிடும். கன்னடம், இந்தி மொழிகள் இடையே தான் இதுபோன்ற சர்ச்சை விவாதம், முரண்பாடுகள் எட்டிப் பார்க்கும். இம்முறை உருது மொழியில் வந்து முடிந்திருக்கிறது.
அண்மையில் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள முடிகேரே பகுதியில் அங்கன்வாடி ஆசிரியர்களை நியமிப்பதற்கான காலி பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியானது. அதில், விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கட்டாயம் உருது மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் இந்த அறிவிப்பு பற்றி அறிந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாநில மொழியான கன்னடம் இருக்கையில், ஏன் உருது மொழியை தகுதியாக வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந் நிலையில், பா.ஜ. இந்த விவகாரத்தை இப்போது கையில் எடுத்துள்ளது. தமது கடும் கண்டனத்தை கர்நாடக மாநில பா.ஜ., எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
அதில் கூறி உள்ளதாவது:
கன்னட மொழி பேசும் பகுதிகளில் உருதுமொழியை கர்நாடக அரசு திணிக்க நினைக்கிறது. அதற்கான அரசு உத்தரவை மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் மூலம் வெளியிடப்பட்டு உள்ளது.
முடிகேரே பகுதியில் அங்கன்வாடி ஆசிரியர் பணிக்கு உருது மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவின் அலுவல் மொழி கன்னடமாக இருக்கும் போது எதற்காக உருது மொழி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு விளக்கம் தேவை. இவ்வாறு அந்த வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கிடுக்கிப்பிடி கேள்விக்கு பதில் கூற முடியாமல் சித்தராமையா பரிதவித்து வருகிறார்.