UPDATED : அக் 12, 2024 12:00 AM
ADDED : அக் 12, 2024 11:11 AM

பெ.நா.பாளையம்:
பருவ மழை தீவிரமடைந்ததையொட்டி, பள்ளிகளில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
தற்போது, தமிழகம் முழுவதும் பருவ மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அதிக அளவு பெய்யும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும், இரண்டாம் பருவத்திற்காக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பாட புத்தகங்களும் வழங்கப்பட்டன.
இந்நிலையில் பருவ மழை தீவிரம் அடைந்ததையொட்டி பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதில், பள்ளிகளில் மின் இணைப்புகளை கண்காணிப்பது, வடிகால்களை சுத்தம் செய்வது, திறந்தவெளி கால்வாய்களை துார்வாரி மூடுதல், குழிகளை நிரப்புதல் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மரங்கள், மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும். மேற்கூரைகளில் தண்ணீர் தேங்குவதை கண்காணித்து, உடனடியாக அகற்ற வேண்டும்.
பழுதடைந்த கட்டடங்களை பயன்படுத்துவதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.
அத்தகைய கட்டடங்களை இடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தவிர, பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏரி, ஆறு, குளங்களில் மாணவர்கள் சென்று குளிப்பதை தவிர்க்கவும், வெள்ள அபாயம் உள்ள நீர்நிலைகள் அருகே வேடிக்கை பார்க்க அனுமதிக்க கூடாது என்பதை பெற்றோருக்கு அறிவுறுத்த வேண்டும்.
மாணவர்கள் சைக்கிள்களில் பள்ளிக்கு வரும்போது பாதுகாப்பாக வர அறிவுறுத்த வேண்டும். தொடர் மழையால் பள்ளியில் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச் சுவர் உறுதி தன்மையை கண்காணிக்க வேண்டும். மேலும், பழுதான சுற்றுச்சுவர் பகுதிகளை சுற்றி வேலி அல்லது தடுப்பு ஏற்படுத்த வேண்டும்.
மின் இணைப்புகள் சரியாக உள்ளதா, மின் கசிவு ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து, உறுதிப்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள நீர் தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவு நீர் தொட்டி, தரைமட்ட கிணறுகள், தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் அவை மூடப்பட வேண்டும்.
பருவ கால மாற்றங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் டெங்கு உள்ளிட்ட நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.