UPDATED : டிச 20, 2024 12:00 AM
ADDED : டிச 20, 2024 08:28 AM
பெங்களூரு:
கோல்கட்டாவில் பெண் பயிற்சி டாக்டர், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின், ஊழியர்களின் பாதுகாப்பில் மருத்துவமனை நிர்வாகங்கள் ஆர்வம் காட்டுகின்றன.
சமீபத்தில் கோல்கட்டாவில், பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரத்துக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. கர்நாடகாவிலும், டாக்டர்கள், மருத்துவமனைகளில் டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள், அவ்வப்போது நடக்கின்றன. பணியாற்றும் இடத்திலும், வெளியிலும் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெங்களூரின் அரசு சார்ந்த ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை, பெண்களின் பாதுகாப்புக்காக, சுஹ்ருத் என்ற பெயரில், மொபைல் செயலி வடிவமைத்துள்ளது.
இது தொடர்பாக, மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:
சுஹ்ருத் என்றால் நல்ல இதயம் என, அர்த்தமாகும். பணியில் உள்ள மருத்துவ ஊழியர்கள், கஷ்டத்தில் சிக்கும் போது ஒருவருக்கு ஒருவர் மனித நேயத்துடன் உதவி கொள்ளும் நோக்கில், இந்த மொபைல் செயலியை வடிவமைத்துள்ளோம்.
சமீப நாட்களாக மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்கள் தாக்கப்படுவது, பாலியல் தொல்லைக்கு ஆளாவது, பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதை கட்டுப்படுத்த, இப்போது முதன் முறையாக, மொபைல் செயலியை வடிவமைத்தோம்.
சுஹ்ருத் செயலியை, பெண் ஊழியர்கள் தங்கள் மொபைல் போனில் டவுன் லோட் செய்து கொள்ள வேண்டும். பிரச்னையில் சிக்கும் போது, இதை அழுத்தி உதவி பெறலாம். லொகேஷன் ஷேர் செய்து கொள்ளலாம். அபாயத்தில் சிக்கினால், தங்கள் மொபைல் போனை மூன்று முறை ஷேக் செய்தால் போதும். அனைவருக்கும் அலெர்ட் மெசேஜ் செல்லும். மருத்துவமனையில் பாலியல் தொல்லைக்கு ஆளானால், செயலி மூலமாகவே புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.