எந்த பல்கலைக்கழகமும் மூடப்படாது! சட்டசபையில் சித்தராமையா உறுதி
எந்த பல்கலைக்கழகமும் மூடப்படாது! சட்டசபையில் சித்தராமையா உறுதி
UPDATED : மார் 15, 2025 12:00 AM
ADDED : மார் 15, 2025 10:29 PM
பெங்களூரு:
மாநிலத்தில் எந்த பல்கலைக்கழகமும் மூடப்படாது. பா.ஜ., ஆட்சியில் துவங்கப்பட்ட புதிய பல்கலைக்கழகங்கள் தொடர வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது என சட்டசபையில் முதல்வர் சித்தராமையா கூறினார்.
சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் அசோக், அஸ்வத் நாராயண் உள்ளிட்ட பா.ஜ., உறுப்பினர்கள் பேசுகையில், முந்தைய பா.ஜ., ஆட்சியில் புதிதாக துவங்கப்பட்ட 9 பல்கலைக்கழகங்களை மூட அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்மூலம் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்தனர். இதற்கு முதல்வர் சித்தராமையா பதில் அளிக்கையில், மாநிலத்தில் எந்த பல்கலைக்கழகமும் மூடப்படாது.
புதிய பல்கலைக்கழகங்களை தொடர வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி முடிவு செய்ய, துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் அமைச்சரவை துணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்றார்.
அப்போது பேசிய அசோக், பல்கலைக்கழகங்களை மூடும் விஷயத்தில் துணை முதல்வர் சிவகுமார், உயர்கல்வி அமைச்சர் எம்.சி.சுதாகர் வெவ்வேறு அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.
இது எங்களை கவலை அடைய செய்துள்ளது. ஆனால் நீங்கள் கூறுவது கதவை அடைப்போம், பூட்டுப்போட மாட்டோம் என்ற அர்த்தத்தில் உள்ளது என்றார்.
பா.ஜ., உறுப்பினர் அஸ்வத் நாராயண் பேசும்போது, உயர்கல்வி அமைச்சர் எம்.சி.சுதாகர் பல் மருத்துவர். அவருக்கு பற்களை எப்படி பிடுங்குவது என்பது மட்டும் தெரியும். பல்கலைக்கழக பிரச்னையை எப்படி சரி செய்வது என்று தெரியாது என்றார்.
இதனால் கோபம் அடைந்த எம்.சி.சுதாகர், அஸ்வத் நாராயணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சபாநாயகர் காதர் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்தார்.