UPDATED : மே 27, 2025 12:00 AM
ADDED : மே 27, 2025 09:58 AM
கோவை:
அரசூர் அரசு மேல்நிலை பள்ளியில், பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
நேற்று கோவை வந்த அவர், கோவை காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும், கோடைகால பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். பின், அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும், பணிகளை பார்வையிட்டார்.
கடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் இடத்தைப் பிடித்து, கோவை ஆர்.எஸ்.புரம் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கை பெற்ற மாணவர்களை, நேரில் சந்தித்து பாராட்டினார்.
அவர்களுக்கு நினைவுப் பரிசாக புத்தகங்களை வழங்கினார். சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ் புதிதாக கட்டப்பட்ட மூன்று வகுப்பறைகள் மற்றும் புதிய கலையரங்கை பார்வையிட்டார். நபார்டு திட்டத்தின் கீழ் உருவாகி வரும், 8 கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.