UPDATED : ஜூலை 09, 2025 12:00 AM
ADDED : ஜூலை 09, 2025 08:42 AM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ் திறனறி தேர்வுக்கான ஆயத்த கூட்டம் நடந்தது. தெற்கு, வடக்கு வட்டாரத்துக்கு உட்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவர்கள், தமிழ் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
தமிழக அரசு, பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு நடத்தும், தமிழ் திறனறி தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பயிற்சியில் விளக்கப்பட்டது. தேர்வு எழுதுவதற்கு எளிமையான கற்றல் முறைகள், தேர்வில் வெற்றி பெற்றால் மாணவர்களுக்கு மாதந்தோறும், 1,500 ரூபாய் கல்வி உதவித்தொகையாக தமிழக அரசு வழங்கும் என விளக்கப்பட்டது.
தமிழ் ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கு எவ்விதம் எளிய முறையில் பயிற்சியளிப்பது, தேர்வில் அவர்களை எவ்வாறு வெற்றி பெறச் செய்வது, விண்ணபிக்க கூடிய வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அதில், 20 தமிழாசிரியர்கள், 50 மாணவர்கள் பங்கேற்றனர். பயிற்சிக்கான ஏற்பாட்டினை பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.தமிழாசிரியர்கள் சிவக்குமார், அர்ஜூனன், மங்கையர்கரசி ஆகியோர் கருத்தாளர்களாக இருந்து பயிற்சி அளித்தனர்.