முட்டையால் கிராமத்தில் சர்ச்சை கல்வி அதிகாரிகளுக்கு தலைவலி
முட்டையால் கிராமத்தில் சர்ச்சை கல்வி அதிகாரிகளுக்கு தலைவலி
UPDATED : ஜூலை 25, 2025 12:00 AM
ADDED : ஜூலை 25, 2025 12:41 PM
மாண்டியா:
சிறார்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில் பள்ளிகளில் வழங்கப்படும் முட்டை, ஒரு கிராமத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாண்டியா நகரின், ஆலகெரே கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு கல்வி பயிலும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு முட்டை வழங்கும்படி வலியுறுத்துகின்றனர். ஆனால் இதற்கு மற்றொரு கோஷ்டி எதிர்ப்பு தெரிவிக்கிறது.
ஆலகெரே கிராமத்தில் வீரபத்ரேஸ்வரா கோவில் உள்ளது. கோவிலின் சுற்றுப்பகுதிகளில் இறைச்சி, முட்டைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில் அருகிலேயே பள்ளி அமைந்துள்ளது. எனவே மாணவர்களுக்கு முட்டை வழங்க வேண்டாம் என்றதால், பள்ளியில் முட்டை வழங்குவதில்லை. மூன்று ஆண்டுகளாக, வாழைப்பழம், கடலை மிட்டாய் வழங்கப்படுகிறது.
பெற்றோர் பலரும் தங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்து வேண்டும். முட்டை வழங்கும்படி, கல்வித்துறை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதற்கு அதிகாரிகளும் சம்மதித்து, முட்டை வழங்கும்படி பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டனர்.
ஆனால் இதற்கு சில பெற்றோரும், கிராமத்தினரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எங்களின் பக்தி உணர்வு பாதிக்கும். ஒருவேளை முட்டை வழங்க முடிவு செய்தால், டி.சி., கொடுத்து விடுங்கள். எங்கள் பிள்ளைகளை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்கிறோம் என, முரண்டு பிடிக்கின்றனர்.
இதற்கிடையே மற்ற மாணவர்களின் பெற்றோரோ, எங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்து தேவை. முட்டை தாருங்கள் என, பிடிவாதம் பிடிக்கின்றனர். கிராமத்தினர் இடையிலான முட்டை விவாதத்தால், அதிகாரிகள் மண்டையை பிய்த்துக் கொள்கின்றனர்.