UPDATED : செப் 16, 2025 12:00 AM
ADDED : செப் 16, 2025 10:46 AM
பங்கார்பேட்டை:
தாக்கப்பட்ட ஆசிரியைக்கு மாநில அரசு மகளிர் ஊழியர் சங்கத்தலைவர் ரோஹினி கவுடா ஆறுதல் கூறினார்.
மாலுார் தாலுகா சேத்ரனஹள்ளி அரசு பள்ளி ஆசிரியை மஞ்சுளா என்பவரை, ஒரு பள்ளி மாணவரின் தந்தை சவுடப்பா என்பவர் தாக்கினார். காயம் அடைந்த ஆசிரியை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
தகவல் அறிந்த மாநில மகளிர் அரசு ஊழியர் சங்க தலைவர் ரோஹினி கவுடா, பங்கார்பேட்டையில் வீட்டில் ஓய்வில் உள்ள ஆசிரியை மஞ்சுளாவை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின் அவர் அளித்த பேட்டி:
ஆசிரியை மஞ்சுளா மீது தாக்குதல் நடந்து மூன்று நாட்கள் ஆகியும், இன்னும் குற்றவாளியை போலீசார் கைது செய்யவில்லை. சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும். மாநிலம் முழுதும் அரசு பெண் ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து கல்வி அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தப்படும். ஆசிரியை மீதான தாக்குதல் என்பது சமூகத்தில் அவமான செயல். இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த அனைவருமே போராட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிரியை மஞ்சுளா தாக்கப்பட்டதற்கு கோலார் மாவட்ட அரசு ஊழியர்கள் சங்க தலைவர் அஜய் குமார், தாலுகா தலைவர் முனிகவுடா, ஆசிரியர்கள் சங்கத் தலைவர் முருகையா ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

