UPDATED : நவ 26, 2025 10:13 PM
ADDED : நவ 26, 2025 10:19 PM

சென்னை:
தமிழகத்தில், எம்.டி., எம்.எஸ்., முதுநிலை மருத்துவ படிப்புகளிலும், பட்டய படிப்புகளிலும், 5,000க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
அவற்றுக்கு கலந்தாய்வு நடப்பதற்கு முன், கல்விக் கட்டணம், மாணவர்களுக்கான ஊக்கத் தொகை, விடுதிக் கட்டணம், வைப்புத் தொகை, இதர செலவினங்கள் குறித்த விபரங்களை, அனைத்து கல்லுாரிகளும் வெளியிட வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தமிழகத்தின் அனைத்து முதுநிலை மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கான கல்வி கட்டணத்தை, மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதில், விடுதி கட்டணம், உணவு கட்டணம், போக்குவரத்து கட்டணம் உள்ளிட்டவை, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களால், நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. நடப்பு கல்வியாண்டில், அனைத்து அரசு மருத்துவ கல்லுாரிகளிலும், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு, ஆண்டுக்கு, 40,000 ரூபாய் கல்விக் கட்டணம், 10,000 ரூபாய் சிறப்பு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை பட்டய படிப்புகளுக்கு, கல்வி கட்டணமாக 20,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கான ஊக்கத் தொகை, முதல் ஆண்டில் மாதம், 54,025 ரூபாய், இரண்டாம் ஆண்டில் 55,149, மூன்றாம் ஆண்டில், 56,275 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை பட்டய படிப்பு மாணவர்களுக்கான ஊக்கத் தொகை, முதல் ஆண்டில் மாதம் 50,673 ரூபாய், இரண்டாம் ஆண்டில் 53,461 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்தில் உள்ள, 21 தனியார் மருத்துவ கல்லுாரிகளுக்கான கல்வி கட்டணமும் வெளியிடப்பட்டுள்ளது.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில், நேரடி தொடர்பில்லாத பாடங்கள் மற்றும் பட்டயப் படிப்புகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 3 லட்சம் ரூபாய், நிர்வாக இடங்களுக்கு 5 லட்சம் ரூபாய், வெளிநாடு வாழ் இந்தியர் இடங்களுக்கு 19 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிளினிக்கல் படிப்புகளுக்கு, முறையே, 3.5 லட்சம், 16 லட்சம் மற்றும் 29 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, மேம்பாட்டு நிதியாக, அதிகபட்சமாக 60,000 ரூபாய் வரை, தனியார் கல்வி நிறுவனங்கள் வசூலித்து கொள்ள, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

