தொழில்நுட்பக் கல்வி இயக்கக உத்தரவால் எழுந்தது அதிருப்தி
தொழில்நுட்பக் கல்வி இயக்கக உத்தரவால் எழுந்தது அதிருப்தி
UPDATED : நவ 27, 2025 07:38 AM
ADDED : நவ 27, 2025 07:39 AM

கோவை:
தொழில் நுட்ப இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தொடரும் வழக்குகள் குறித்து, தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ஊழியர்கள், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், உயர்கல்வித்துறை செயலாளர், தொழில்நுட்பக் கல்வி கமிஷனர், கல்லுாரி முதல்வர்களை பிரதிவாதியாக சேர்த்து, வழக்கு தொடர்கின்றனர்.
இவ்வழக்குகளுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் உள்ள சட்டப்பிரிவு மூலமாக, உரிய ஆவணங்கள் தயார் செய்து, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகிறது.
இனி வழக்கு தொடர்ந்த ஊழியர் பணிபுரியும் கல்லுாரி முதல்வர் அல்லது அலுவலகத் தலைவர் அந்த ஆவணங்களை தயார் செய்ய வேண்டும். அதை இயக்ககம் மற்றும் அரசு வழக்கறிஞரிடம் ஒப்புதல் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வழக்கு விசாரணைக்கு வரும் போது, தேவையான ஆவணங்களை வழங்க வேண்டும்.
ஊழியருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டால், அதை கல்லுாரி முதல்வர்களே நிறைவேற்ற வேண்டும். அதேபோல், தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் மேல் முறையீட்டையும் அவர்களே மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை நிறைவேற்றாத முதல்வர்கள், பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இன்ஜி., கல்லுாரி, பாலிடெக்னிக்கில் பணிபுரியும் முதல்வர்கள், ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

