தென்மாநில மின்சார குழு தலைவராக ராதாகிருஷ்ணன் நியமனம்
தென்மாநில மின்சார குழு தலைவராக ராதாகிருஷ்ணன் நியமனம்
UPDATED : ஏப் 07, 2026 09:38 AM
ADDED : ஏப் 07, 2026 09:39 AM
சென்னை:
தென்மாநில மின் வாரியங்கள் இடையே, மின்சாரம் தொடர்பாக ஏற்படும் பிரச்னைக்கு தீர்வு காணும், தென்மாநில மின்சார குழுவின் தலைவராக, தமிழக மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், மத்திய அரசின் தேசிய அனல் மின் கழகம், இந்திய அணு மின் கழகம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் போன்றவற்றுக்கு சொந்தமான அனல் மற்றும் அணு மின் நிலையங்கள் உள்ளன.
அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம், மத்திய அரசின், 'பவர்கிரிட்' நிறுவனத்தின் மின் வழித்தடங்களில் எடுத்து வரப்பட்டு, மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.
மின் நிலையங்கள், மின் வழித்தடங்களில் பாதிப்பு ஏற்படும் போது மின்சாரம் வழங்குவது குறைகிறது.
இந்த பிரச்னை தொடர்பாக ஆலோசிக்க, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், தென் மாநில மின்சார குழு உள்ளது. இது, மத்திய மின்சார ஆணையத்தின் கீழ் செயல்படுகிறது.
அக்குழுவில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் உள்ளன.
குழுவின் தலைவராக, ஆண்டுதோறும் ஒரு மாநிலத்தின் மின்வாரிய தலைவர் நியமிக்கப்படுவார். அதன்படி, நடப்பு நிதியாண்டிற்கான தலைவராக, தமிழக மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால், சத்தீஸ்கர் மாநிலம், ராய்கட் - கரூர் புகளூர் மின் வழித்தடத்தை தேசிய சொத்தாக அறிவிப்பது உள்ளிட்ட, தமிழக பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு காணப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

