மாநில விளையாட்டுப் போட்டி: அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை
மாநில விளையாட்டுப் போட்டி: அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை
UPDATED : ஏப் 18, 2026 03:35 PM
ADDED : ஏப் 18, 2026 03:36 PM
கடலுார்:
மாநில அளவிலான எறிபந்து போட்டியில், அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
கடலுார் அடுத்த பெரியகுப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் திருச்சி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடந்த தமிழ்நாடு மாநில அளவிலான எறிபந்து விளையாட்டுப் போட்டியில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்றனர். தொடர்ந்து 12வது ஆண்டாக கடலுார் மாவட்டம் சார்பில் வெற்றி பெற்றனர்.
மாநிலப் போட்டிக்கும் தகுதி பெற்று பங்கேற்று விளையாடினர். அதே போல, 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் என இரண்டு பிரிவிலும் மாநில போட்டியில் பங்கேற்றனர். மூன்று அணிகள் மாநிலப் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்தது.
இதற்காக பள்ளியில் நடந்த பாராட்டு விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் தலைமை தாங்கி, மாநிலப் போட்டிகளில் பங்கேற்று விளையாடிய மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், கோப்பை வழங்கி பாராட்டினார்.
விழாவில் பள்ளி முன்னாள் மாணவர்கள் இளவேந்தன், சுபாஷ் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். உதவி தலைமை ஆசிரியர் செல்வகுமார், பள்ளியின் ஆசிரியர் செயலர் கண்ணன், அறிவியல் ஆசிரியர் ஆரோக்கிய சுரேஷ் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் கோவலன் நன்றி கூறினார்.

