UPDATED : ஏப் 23, 2026 10:48 PM
ADDED : ஏப் 23, 2026 10:51 PM

சென்னை:
தனியார் பள்ளிகளில், 25 சதவீத இலவச மாணவர் சேர்க்கைக்கான, ஆர்.டி.இ., திட்ட விண்ணப்பப்பதிவு துவங்கியுள்ளது.
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டமான, ஆர்.டி.இ.,யின் கீழ், தனியார் பள்ளிகளில் உள்ள மொத்த இடங்களில், 25 சதவீத இடங்கள், ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள 7,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில், இத்திட்டத்தின் கீழ் ஏழைக் குழந்தைகள் சேர்ந்து வருகின்றனர். எல்.கே.ஜி., எனும் பாலர் வகுப்பு மற்றும் ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு, எட்டாம் வகுப்பு வரை, அவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்கப்படுகிறது.
இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட 2013 முதல், 5.7 லட்சம் குழந்தைகள், தனியார் பள்ளிகளில் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். தற்போது, இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, 'https://rte.tnschools.gov.in/' எனும் இணையதளத்தின் வாயிலாக, 'ஆன்லைன்' விண்ணப்பம் திறக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, அடுத்த மாதம் 18ம் தேதி வரை, சிறுபான்மை அந்தஸ்து பெறாத, அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐ.சி.எஸ்.இ., சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், இலவசமாக மாணவர்களை சேர்க்க முடியும்.
தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள ஏதேனும் ஐந்து பள்ளிகளுக்கு, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, ஜாதிச் சான்றிதழ்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.

