பொறியியல் மாணவர் சேர்க்கை வழிகாட்டு மையம் துவக்கம்
பொறியியல் மாணவர் சேர்க்கை வழிகாட்டு மையம் துவக்கம்
UPDATED : மே 06, 2026 06:26 PM
ADDED : மே 06, 2026 06:27 PM
உடுமலை:
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தகவல் மற்றும் வழிமுறை உதவி மையம் துவக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லுாரிகள், அண்ணா பல்கலை துறை கல்லுாரிகள் மற்றும் அதன் உறுப்பு கல்லுாரிகள், அண்ணாமலை பல்கலை., மற்றும் சுயநிதி பொறியியல் கல்லுாரிகளில், ஒப்படைக்கப்பட்ட இடங்களில், மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 2ம் தேதி வரை மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், தங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் துவக்க அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில், உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தகவல் மற்றும் வழிமுறை உதவி மையம் துவக்கப்பட்டுள்ளது. கல்லுாரி முதல்வர் சிவக்குமார் முன்னிலையில் இம்மையம் துவக்கப்பட்டது.
உடுமலை சுற்றுப்பகுதிகளில் பிளஸ் 2 முடித்து, பொறியியல் கல்லுாரியில் கலந்தாய்வு வாயிலாக சேர விருப்பம் உள்ள மாணவர்கள், விண்ணப்பத்தை இணைய வழியில் சமர்ப்பிக்கவும், விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவு பெற இம்மையத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என மைய ஒருங்கிணைப்பாளர்கள் லோச்சனாம்பாள், இணை ஒருங்கிணைப்பாளர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளனர்.
