UPDATED : மே 13, 2026 03:16 PM
ADDED : மே 13, 2026 03:17 PM
புதுடில்லி:
கூகுள் நிறுவனம், இந்தியாவில் ஏ.ஐ., சர்வர்களை தயாரிப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
இந்தியாவிலேயே செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கான சர்வர்களை தயாரிக்குமாறு கூகுள் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களை கேட்டுக்கொண்டேன்.
இங்கு தயாரிக்கப்படும் சர்வர்கள் உலக தரத்தில் உள்ளன. ஏற்கனவே ஹெச்.பி., நிறுவனம் இந்தியாவில் சர்வர் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தற்போது கூகுள் நிறுவனம், ஏ.ஐ., அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சர்வர்கள், டிரோன் தயாரிப்புக்கான முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது.
மத்திய அரசு, தரவு மையங்கள் மற்றும் டிஜிட்டல் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
பட்ஜெட்டிலேயே 2047 வரை தரவு மையங்களுக்கு வரி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் வாயிலாக, கிட்டத்தட்ட 18.8 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில், அஸ்வினி வைஷ்ணவ் கூகுள் நிறுவனத்தின் துணைத்தலைவர் வில்சன் ஒயிட்டை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து இத்தகவலை அவர் தெரிவித்து உள்ளார்.
கூகுள் நிறுவனம், விசாகப்பட்டணத்தில் ஏ.ஐ., மையத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளது. அதானி கனெக்ஸ், ஏர்டெல்லின் துணை நிறுவனமான நெக்ஸ்ட்ரா ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கடந்த அக்டோபரில் கூகுள், இந்தியாவில் 1.41 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்வதாக அறிவித்திருந்தது. அதன் ஒரு அங்கமாகவே ஏ.ஐ., மையம் மற்றும் 3 தரவு மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஆந்திர அரசு, 600 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிகழ் நேர ஏ.ஐ., பயன்பாடுகள், எல்.எல்.எம்., எனும் பெரும் அளவிலான தகவல் திரட்டல் ஆகிய பணிச்சுமைகளைக் கையாளவே ஏ.ஐ., சர்வர்கள் அமைக்கப்படுகின்றன.
கூகுள் நிறுவனம், சொந்தமாகவே டென்சார் பிராசசிங் யூனிட் எனப்படும் ஏ.ஐ., சாதனங்களை உருவாக்கி வருகிறது. இதற்கு குவாண்டா கம்ப்யூட்டர் மற்றும் பாக்ஸ்கான் நிறுவனங்கள் உதவுகின்றன. அந்நிறுவனங்கள், சர்வர் அமைப்புகளை பொருத்தி தரும் பணிகளை செய்கின்றன.
ஜூலையில் 3வது செமிகண்டக்டர் ஆலை
நாட்டில் இரண்டு செமிகண்டக்டர் ஆலைகள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. மூன்றாவது ஆலை ஜூலையிலும், 4வது ஆலை டிசம்பரிலும் உற்பத்தியை தொடங்கும். இவை தவிர, 12 செமிகண்டக்டர் ஆலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக உள்நாட்டு சிப் தயாரிப்புத் துறை வலுவடைந்து வருகிறது.
