அரசு பள்ளிகளை மூடக்கூடாது: மேல்சபை தலைவர் வலியுறுத்தல்
அரசு பள்ளிகளை மூடக்கூடாது: மேல்சபை தலைவர் வலியுறுத்தல்
UPDATED : மே 27, 2026 06:50 PM
ADDED : மே 27, 2026 06:51 PM
பெங்களூரு:
'கே.பி.எஸ்., பள்ளிகளை திறப்பதற்காக, கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளை மூடக்கூடாது,' என மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி மாநில அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
எல்.கே.ஜி., முதல் பி.யு., 2ம் ஆண்டு வரை அனைத்து மாணவர்களும் ஒரே பள்ளியில் மாணவர்கள் படித்து பயன்பெறுவதற்காக, கே.பி.எஸ்., எனும் கர்நாடக பொது பள்ளிகள் என்ற பெயரில் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த பள்ளிகளில் கன்னடம் மற்றும் ஆங்கில வழியில் பாடம் கற்பிக்கப்படும். மற்ற அரசு பள்ளிகளை போல துவக்க, நடுநிலை, உயர் நிலை என்று இல்லாமல், ஒரே பள்ளியில் அனைத்து வகுப்புகளும் உண்டு
இதனால், பெற்றோர் மத்தியில் கே.பி.எஸ்., பள்ளிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இப்பள்ளிகளை விரிவுபடுத்தும் நோக்கில் மாநில அரசு செயல்பட்டு வருகிறது.
இதற்காக, 'கே.பி.எஸ்., மேக்னட் திட்டம்' கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின்படி, புதிதாக ஒரு இடத்தில் கே.பி.எஸ்., பள்ளி அமையவுள்ளது என்றால், அவ்விடத்தை சுற்றி 5 கி.மீ., துாரத்தில், குறைந்த மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகள் மூடப்பட வேண்டும். அங்குள்ள மாணவர்கள் கே.பி.எஸ்., பள்ளிகளில் சேர வேண்டும்.
இத்திட்டத்தால், கிராமங்களில் உள்ள கன்னட வழி பள்ளிகள் மூடப்படும். அப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களின் வேலை பறிபோகும் என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இது குறித்து, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி மாநில அரசுக்கு எழுதியுள்ள கடிதம்:
மாநிலத்தில் கே.பி.எஸ்., பள்ளிகளை தொடங்குவது நல்ல முடிவாகும். அதற்காக, கிராமங்களில் உள்ள கன்னட வழி பள்ளிகளை மூடக்கூடாது.
கன்னட வழி பள்ளிகளை கே.பி.எஸ்., பள்ளிகளுடன் இணைக்கக்கூடாது. இது சரியான செயல் அல்ல. புதிதாக பள்ளியை திறக்க வேண்டும். அதற்காக, பழைய பள்ளிகளை மூடாதீர்கள்.
தார்வாட், ஹாவேரி மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளை, கே.பி.எஸ்., பள்ளிகளுடன் இணைக்கும் முயற்சி நடக்கிறது. இதை மாநில அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
பள்ளிகளை மூடுவதால் ஆசிரியர்கள், ஊழியர்களின் வேலை பறிபோகும். அவர்களுக்காக என்ன மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
