இடமாற்றத்திற்காக காத்திருக்கும் அதிகாரிகளால் அரசு பணிகள் பாதிப்பு
இடமாற்றத்திற்காக காத்திருக்கும் அதிகாரிகளால் அரசு பணிகள் பாதிப்பு
UPDATED : மே 29, 2026 01:13 PM
ADDED : மே 29, 2026 01:15 PM
சென்னை:
ஆட்சி மாற்றத்திற்கு பின், பணியிட மாற்றத்திற்காக காத்திருக்கும் அதிகாரிகளால், பல்வேறு அரசு துறை பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் மற்றும் ஒன்பது அமைச்சர்கள், 10ம் தேதி பதவி ஏற்றனர். இதைத் தொடர்ந்து, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, அனைத்து துறைகளுக்கும் சேர்த்து, 34 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுணக்கம்
துறை வாரியான ஆய்வு கூட்டங்களில் அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் பங்கேற்று வருகின்றனர். அரசு பொறுப்பேற்ற பின், பல்வேறு துறைகளில் உள்ள உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். பணியிட மாற்றம் செய்யப்பட்ட பலர், காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இன்னும் அவர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படவில்லை.
தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் உட்பட, பல்வேறு துறைகளின் செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை மாற்ற, அமைச்சர்கள் விரும்புகின்றனர். இதையறித்த அதிகாரிகள் பலரும் பணியிட மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தி.மு.க., அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகள் பலரும், பணியிட மாற்றம் உறுதியாக வரும் என்று நினைக்கின்றனர். இதனால், தங்களது துறை பணிகளில், அவர்கள் கவனம் செலுத்தாமல், ஒப்புக்கு வேலை பார்த்து வருகின்றனர்.
புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், சட்ட சபையில் நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. இதைத் தொடர்ந்து, துறை வாரியாக மானிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. பணியிட மாற்றத்தை எதிர்பார்த்துள்ள அதிகாரிகளால், இப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
'டம்மி' பதவி
இது குறித்து, அரசு அலுவலர்கள் வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் போது, தங்களுக்கு ஆதரவான அதிகாரிகளை அரவணைத்து கொண்டு, மற்ற அதிகாரிகளுக்கு 'டம்மி' பதவி வழங்குவது வழக்கம்.
ஆனால், தற்போதைய முதல்வர் விஜய், திறமையான மற்றும் நேர்மையான அதிகாரிகளுக்கு தகுந்த பதவிகளை வழங்க விரும்புகிறார்.
இதற்காக, பார்த்து பார்த்து அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பணியிட மாற்றத்தை எதிர்பார்த்து, மாவட்ட கலெக்டர்கள், துறை செயலர்கள் உள்ளிட்டோரும் காத்திருக்கின்றனர்.
இதனால், மாவட்ட நிர்வாகத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு தேவையான நிதிகளை பெறுவதில், அவர்கள் தாமதம் செய்து வருகின்றனர். இதே நிலை தொடரவிடாமல், அதிகாரிகள் இடமாற்றத்தை விரைந்து முடித்து, ஆட்சி நிர்வாகத்தை முதல்வர் விஜய் முழுமையாக கட்டமைத்து, அடுத்தகட்ட பணிகளை துவங்க வேண்டும்.
இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.
