முள்ளுக்குறிச்சி அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
முள்ளுக்குறிச்சி அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
UPDATED : ஜூன் 03, 2026 07:56 PM
ADDED : ஜூன் 03, 2026 07:57 PM
ராசிபுரம்:
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், முள்ளுக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், கடந்த, 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் பிளஸ் 2 படித்து முடித்த முன்னாள் மாணவர்கள், நீண்ட இடைவேளைக்கு பின், நேற்று சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்த நண்பர்கள், தங்களது தற்போதைய வேலை மற்றும் குடும்ப விபரங்களை கேட்டறிந்தனர். குறிப்பாக, பள்ளி பருவத்தில் செய்த குறும்புகள், தேர்வறையில் ஏற்பட்ட பயம், வகுப்பறையில் ஒளிந்து அமர்ந்து சாப்பிட்ட உணவுகள் மற்றும் மைதானத்தில் விளையாடிய கதைகளை பேசி நெகிழ்ச்சியடைந்தனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தாங்கள் படித்து வளர்ந்த அதே பழைய வகுப்பறையில் நண்பர்கள் அனைவரும் மீண்டும் அமர்ந்து பார்த்தனர். வெறும் சந்திப்பாக மட்டும் இல்லாமல், தங்களுக்கு கல்வி தந்த பள்ளிக்கு தேவையான உதவிகளையும் செய்ய மாணவர்கள் முன்வந்தனர்.
அதன்படி, முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பள்ளிக்கு தேவையான புதிய புத்தகங்கள் மற்றும் சுத்தமான குடிநீர் வசதிகளை செய்து கொடுத்தனர். தங்களது இந்த செயலால் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.
