வகுப்புக்கு செல்லாத ஹெச்.எம்.,கள்; மாணவர்கள் கல்வித்தரம் பாதிப்பு
வகுப்புக்கு செல்லாத ஹெச்.எம்.,கள்; மாணவர்கள் கல்வித்தரம் பாதிப்பு
UPDATED : ஜூன் 09, 2026 10:03 AM
ADDED : ஜூன் 09, 2026 10:04 AM
சென்னை:
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தலைமை ஆசிரியர்கள் பாடம் நடத்தாததால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
இது குறித்து, தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
தமிழக கல்வி விதிகளின்படி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஒரு வாரத்துக்கு 10 பாட வேளைகளையும், உதவி தலைமை ஆசிரியர்கள், 20 பாட வேளைகளையும் கையாள வேண்டும்.
அத்துடன், மற்ற ஆசிரியர்கள் நன்றாக பாடம் நடத்துகின்றனரா என, மாதத்துக்கு தலா, 20 பாட வேளைகளை கண்காணித்து, மொபைல் செயலியில் பதிவிட வேண்டும். மற்ற ஆசிரியர்களுக்கு வாரம் 28 பாட வேளைகளை ஒதுக்க வேண்டும்.
அதே சமயம், அரசு வழங்கியுள்ள தலைமை ஆசிரியர்களுக்கான கையேட்டில், உதவி தலைமை ஆசிரியருக்கு வாரம் , 14 பாடவேளைகள் ஒதுக்க வேண்டும். மற்ற பாட வேளைகளில் தலைமை ஆசிரியருடன் இணைந்து, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
அதாவது, கல்வி விதிகளில், 20 பாட வேளைகள் என்றும், தலைமை ஆசிரியர்களுக்கான கையேட்டில், 14 பாட வேளைகள் என்றும் மாற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், சில உதவி தலைமை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் கையேட்டை மேற்கோள் காட்டி, தலைமை ஆசிரியர்கள், 10 பாட வேளைகளை கையாண்டால் மட்டுமே , தங்களால், 14 பாட வேளைகளை கவனிக்க முடியும் என்று கறாராக கூறி விடுகின்றனர்.
தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர், அலுவலக பணிகளையும் கவனிக்க வேண்டி இருப்பதால், அவர்களுக்கு ஒதுக்கப்படும் பாட வேளையில் பாடம் நடத்துவது சிரமமாக உள்ளது.
அதே நேரம், அந்த பாடங்களுக்கு வேறு ஆசிரியர்களும் நியமிக்கப்படுவதில்லை. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, மாணவர்களின் விகிதத்துக்கு ஏற்ப, கூடுதல் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களை அரசு நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
