கல்லூரி மாணவ மாணவியருக்கு தொல்லியல், கல்வெட்டு பயிற்சி
கல்லூரி மாணவ மாணவியருக்கு தொல்லியல், கல்வெட்டு பயிற்சி
UPDATED : ஜூன் 11, 2026 04:44 PM
ADDED : ஜூன் 11, 2026 04:46 PM
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகம் சார்பில், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லுாரியின் தமிழ் மற்றும் வரலாற்றுத் துறை மாணவ, மாணவியருக்கான உள்ளகப் பயிற்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த ஜூன் 3ம் தேதி தொடங்கிய இந்த 10 நாள் பயிற்சியில், அருங்காட்சியக பொருட்களைக் கையாளும் முறைகள், தொல்லியல் பொருட்களைப் பராமரிப்பது மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுகளைப் படிப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
பயிற்சியின் ஒரு பகுதியாக, நேற்று, காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில் உள்ள பழங்காலச் சிலைகள் மற்றும் கல்வெட்டுகள் குறித்து மாணவ மாணவியருக்கு நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், ஏதேனும் புதைபொருட்கள் கண்டறியப்பட்டால் அதுகுறித்து முதலில் எந்த அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த பயிற்சியினை காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர் தலைமை தாங்கி, மாணவ மாணவியருக்கு விரிவான விளக்கங்களை அளித்து வருகிறார். 10 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியின் நிறைவு நாளன்று, கைலாசநாதர் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில், பங்கேற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளதாக அருங்காட்சியகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
