சிறப்பு பள்ளிகளுக்கு நன்கொடை க்யூ.ஆர்., கோடு நடைமுறை
சிறப்பு பள்ளிகளுக்கு நன்கொடை க்யூ.ஆர்., கோடு நடைமுறை
UPDATED : ஜூன் 14, 2026 11:38 AM
ADDED : ஜூன் 14, 2026 11:40 AM
கோவை:
சிறப்பு பள்ளிகளில் நன்கொடை வழங்க க்யூ.ஆர்., கோடு ஸ்கேன் செய்து விபரங்களை பதிவிட, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கோவை, திருச்சி, தஞ்சாவூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில், 24 சிறப்பு பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நலனுக்காக, தன்னார்வலர்கள் மற்றும் சேவை அமைப்புகள் வாயிலாக, உணவு, கற்றல் உபகரணங்கள் உட்பட பல்வேறு உதவி பொருட்கள் வழங்கப்படுகின்றன. நன்கொடை வழங்கும் நடவடிக்கைகளை முறைப்படுத்தும் வகையில், க்யூ.ஆர்., கோடு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையங்கள் உட்பட இடங்களில் க்யூ.ஆர்., கோடு தொடர்பான அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், 'க்யூ.ஆர்., கோடு ஸ்கேன் செய்து, விருப்பமான பள்ளியை தேர்ந்தெடுத்து, நன்கொடை விபரம் பதிவு செய்யலாம். மேலும், நன்கொடையாளர்களால், வழங்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் நன்கொடைத் தொகை உட்பட விபரங்களையும் அறிந்து கொ ள்ள முடியும். சில சமயங்களில் தன்னார்வலர்கள் வழங்கும் உணவால் மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுவதை தவிர்க்கவும் இந்த நடைமுறை உதவும்' என்றனர்.
