ஆசிரியர் தினவிழா முடக்கம்; மீண்டும் நடத்த வலியுறுத்தல்
ஆசிரியர் தினவிழா முடக்கம்; மீண்டும் நடத்த வலியுறுத்தல்
UPDATED : ஜூன் 20, 2026 02:25 PM
ADDED : ஜூன் 20, 2026 02:26 PM
சிவகங்கை:
தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு மாநில அரசு சார்பில் மாவட்டந்தோறும் நடத்தப்படும் ஆசிரியர் தினவிழா முடக்கப்பட்டதால் விருது பெற்ற ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
செப்., 5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய விருதுக்கு 11 பேர், மாநிலத்தில் ராதாகிருஷ்ணன் விருதுக்கு மாவட்ட வாரியாக தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் 14 பேர் வீதம் மொத்தம் 532 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு ஆசிரியர் தினமான செப்., 5 அன்று டில்லியில் தேசிய விருதும், சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்விருது பெற்றவர்களை கவுரவிக்கும் பொருட்டு 2021க்கு முன்பு வரை அந்தந்த மாவட்டத்திலேயும் அரசு சார்பில் ஆசிரியர் தினவிழா நடத்தி, தேசிய, மாநில நல்லாசிரியர் விருது பெற்றோர் மற்றும் ஓய்வு பெற்ற சிறந்த ஆசிரியர்களும் கவுரவிக்கப்படுவர். அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் நடக்கும் இவ்விழாவில் அமைச்சர்கள் பங்கேற்று, விருது பெற்ற ஆசிரியர்களை கவுரவப்படுத்துவர். மாவட்ட அளவில் நடக்கும் இது போன்ற ஆசிரியர் தின விழாவால் மற்ற ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை துாண்டும்.
ஆனால் கொரோனா (2021) காலத்திற்கு பின் அந்தந்த மாவட்டங்களில் அரசு சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தினவிழாவை கல்வி அதிகாரிகள் கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால் ஆண்டுதோறும் தேசிய, மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு சொந்த மாவட்டத்தில் பாராட்டு விழா எடுக்காமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்துகிறது. மீண்டும் மாவட்ட அளவில் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
